கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களில் சென்ற சில வருடங்களாக கவர்ன்மெண்டாரது பரிபாலனத்துக்கு உட்பட்டிருக்கும் ஆலயங்களுக்கும் சென்று தொழ தங்களுக்கு அநுமதியளிக்க வேண்டுமென்று ஈழவர்கள் கிளர்ச்சி செய்து வந்த விஷயத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. எனினும், இவர்களுக்குச் சொந்தமான கோயில்கள் கொச்சி, திருவிதாங்கூர் சமன்தானங்களிலிருந்த போதிலும் இவர்கள் தங்களிலும் கீழ்ப்பட்டவர் களாகக் கருதப்படும் புலையர்களை அவற்றுள் அனுமதிக்கிறார்களா என்கிற சந்தேகம் பொதுஜனங்களுக்கு இருந்து வந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுவதற்காக அவர்கள் தங்களுடைய எல்லா கோவில்களுக்குள்ளும் புலையர் முதலிய தாழ்ந்த ஜாதியார் என்போரை விட முயற்சி செய்து வருகின்றார்கள் அல்லாமலும் ஏற்கனவே சில கோயில்களுக்குள் புலையர்கள் செல்ல அநுமதியளித்து விட்டனர். மற்ற கோயில்களிலும் இதே மாதிரி புலையர்களை அநுமதிக்கும்படி வைதீக கோஷ்டியாரைத் தூண்ட சீர்திருத்தக் கோஷ்டியார் சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார்கள். பல்லுருத்தி பவானீஸ்வர கோவிலுக்குத் தெற்கே, ஸ்ரீமான் கே. நாராணனுக்குச் சொந்தமான ஈழவ கோயிலுக்குள் செல்ல புலையர்களுக்கு முதல் முதலாக அனுமதியளிக்கப் பட்டது. ஸ்ரீ நாராணகுருவின் பிரதம சீடரான சுவாமி போதானந்தர் தானே புலையர்களைக் கோயிலுக்குள் பிரதட்சணமாக அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கினார். சுவாமி சத்திய விரதன் என்பவரும் ஸ்ரீமான் கே. ஐயப்பனும் தங்களுக்கும். கீழ் நிலை மையிலுள்ளவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் போக்கிக் கொள்ளக் கூடிய அவசியத்தைப் பற்றிப் பேசுகையில் சமீபத்தில் பல்லுருத்தியில் புலையருடன் சமபந்தி போஜனம் செய்ததற்காக ஈழவர்களுக்கு ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்களைத் தாங்கள் போக்கிவிட்டதாகவும் கூறினார். கும்ப மாதத்தில் தங்கள் தோட்டத்தில் பறிக்கும் எல்லா தேங்காய்களையும் இவ்வூரி லுள்ள (கொச்சி) ஈழவர்கள் பள்ளிக்கூடங்கள் செலவிற்கு நிதி சேர்ப்ப தற்காக கொடுத்துவிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல் எட்டியிருக்கிறது.