தமிழ்நாட்டில் பிராமணாதிக்கம் வலுவடைவதற்காக, வரப்போகும் சட்டசபைத் தேர்தல்களில் பிராமணர்களும் மற்றும் பிராமணர்களின் பிராமணரல்லாத அடிமைகளும் பிராமணாதிக்கத்தின் சார்பாய் எப்படியாவதுஸ்தானம் பெற்று, இதுவரையிலும் பிராமணரல்லாதார் இயக்கங்களின்
மூலமாகவும், மகாத்மாவின் ஒத்துழையாக் கொள்கையின் நிர்மாண திட்டங்கள் மூலமாகவும் ஒரு சிறிதளவு முன்னேறியிருக்கும் பிராமணரல்லாதார்
முன்னேற்றத்தையும், தேச நலத்தையும், அடியோடழித்து ஆதிக்கம் பெற காங்கிரஸ் பெயரால் நமது நாட்டுப் பிராமணர்களின் சூழ்ச்சிக் கொடி வானமளாவப் பறக்கிறது.

இக்கொடியை பிராமணரல்லாதாரிலேயே‌ சில விபூஷணாழ்வார்கள் தாங்கித் திரிகின்றார்களெனச் சொல்ல வெட்கப்படுகின்றேனாயினும் உண்மையைச் சொல்ல அஞ்சுவது அதைவிட வெட்கக் கேடாதலின் சொல்லாமல் விடுவதற்கில்லை

1. தற்காலம் இந்திய தேசிய காங்கிரஸ் என்று சொல்லும் விடுதலை இயக்கமானது பெரும்பாலும் பிராமணர்கள் கையில் சிக்கிக் கொண்ட தென்பதை யாவராலும் மறுக்க முடியாது.

2. காங்கிரஸின் தலைவர் ஸ்ரீமதி சரோஜனி தேவியாராவார். அந்த அம்மையார் பிராமணரல்லாதாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாலும் இவர்பிராமண ஸ்திரீ யென்பதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.

3. அதன் காரியதரிசிகளோ தமிழ்நாட்டுப் பிராமணர்கள் இருவர்
ஒருவர் ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி ஐயங்கார், அவருடைய மனப்பான்மையையும் பிரசாரமும், வாழ்வும் பிராமணரல்லாதார் தீண்டாதாராக்கி, பிராமணாதிக்கமே உலகத்தையெல்லாம் ஆட்கொள்ள வேண்டுமென்கிற கருத்துள்ளவர்
என்பதை எவரும் ஆக்ஷேபிக்க முடியாது. அவர் நடத்தும் சுதேசமித்திரன் பத்திரிக்கைக்குப் பயந்து நமது நாட்டிலுள்ள எத்தனை பிராமணரல்லாத ‘வீரர் கள் சர்க்கஸ்காரனிடம் அகப்பட்ட புலியைப்போல் நடந்து வருகின்றார்களென்பதும், அப்பத்திரிகையின் பிரசாரத்தால் எவ்வளவு தூரம் பிராமணரல்லாதார் முற்போக்கு அழுத்தப்பட்டு வருகின்றதென்பதும் உலகமறிந்த விஷயமே.

4. மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான் கே. சந்தானம் என்று சொல்லும் (பஞ்சாபிலுள்ள) தமிழ்நாட்டு ஐயங்கார் பிராமணர், இவர் மைலாப்பூர் ஐயங்கார் வக்கீலான ஸ்ரீமான் கே பாஷியத்தின் சகோதரராவார். “இந்தியப் பிராமணாதிக்கத்தின் சங்கத்தின் சார்பாய் இதர ஒவ்வொரு மாகாணங்களுக்கும் சென்றிருப்பது போல, பஞ்சாப் மாகாணத்துக்குச் சென்றுள்ள பிரசார ஏஜண்டு
இவர் என்பதையும்” எவரும் மறுக்க முடியாது.

5. காங்கிரஸின் ( டிக்டேட்டர்) என்னும் சர்வாதிகாரியான ஸ்ரீமான் மோதிலால் நேரு அவர்கள் வெளிப்படையாய் மாமிசம் சாப்பிட்டாலும் மது வருந்தினாலும் பிராமணர், பிராமணரே என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

6. மற்றும் தமிழ்நாட்டின் சார்பாய் காங்கிரஸ் நிர்வாகத்தில் ஸ்தானம் பெற்றவரும் இந் நாட்டுக்கேற்ற திட்டம் வகுப்பவருமான ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காரும் எப்படியிருந்தபோதிலும் அவரும் பிராமணரே என்பதை நான் எடுத்துக்காட்டவேண்டியதில்லை.

7. தமிழ்நாட்டுப் பிராமணர்களின் சூழ்ச்சிக்குக் கடுகளவும் பின்வாங்காத, மஹாராஷ்டிர தேசத்துப் பிராமணரில் ஸ்ரீமான் அபயங்கார் என்னும் பிராமணரும் காங்கிரஸ் நிர்வாக அங்கத்தினர் என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

8. மற்றபடி மகாத்மா காந்தி, மௌலானா மகமதலி, ஸ்ரீமான் ஜம்னலால் பஜாஜ் இவர்கள் அங்கத்தினர்களாயிருந்தாலும், தள்ள முடியாமல் தாக்ஷன்யத்திற்குக் கட்டுப்பட்டுத் தங்கள் பெயரைக் கொடுத்து நிர்வாகத்தில் கலக்காமலிருக்கின்றவர்கள் என்பதும் நான் எடுத்துக் கூறத் தேவையில்லை .

9. லாலா லஜபதிராய் அவர்களோ பஞ்சாப் மாகாணத்தில் மெஜாரிட்டியாயிருக்கும் மகமதிய சமூகத்தாரிடம் சந்தேகமும் பயமுங்கொண்டு, பிராமணாதிக்க சபையாகிய இந்து மகாசபையிடம் அடைக்கலம் புகுந்தவர்.

10. மீதியாயிருப்பவர் ஸ்ரீமான் சென்குப்தா, அவர் வைசியராயிருந்தபோதிலும் தமிழ்நாட்டு ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு ஒப்பான சத்தியமூர்த்தியாவார். அவருக்கும் நமது சத்தியமூர்த்தி ஐயரைப் போலவே மீட்டிங்குக்கு ஓர் உடையும், வீட்டில் ஓர் உடையும், வெள்ளைக்காரரைப் பார்க்க உடையுமாக மூவுடை தரிப்பவர். அவருக்கு உலகமே கல்கத்தா கார்பொரேஷன் பிரசிடெண்டு ஸ்தானம்தான்.

ஆகிய இவர்கள்தான் 33 கோடி இந்தியருக்கும் ஜாதகமெழுதுபவர்கள்.

அப்படியிருந்தாலும், தமிழ்நாட்டுக்கு ஜாதகம் எழுதுகிறவர்கள். குறிப்பாகவும் சிறப்பாகவும் ஸ்ரீமான்கள் ஏ. ரெங்கசாமி ஐயங்கார் கே.சந்தானம் ஐயங்கார், எஸ்.சீனிவாசய்யங்கார் ஆகிய மூன்று ஐயங்கார் “சுவாமிகள்” என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவர்ளுக்கு சாரதியாயிருப்பவர் பாரதப் போருக்கு கிருஷ்ணன் போல பிராமணாதிக்கப் போருக்கு நமது ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் “சுவாமிகள்” அமர்ந்திருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டின் பெரும்பாகத்தில் நல்ல பிள்ளையென்கிற பெயருண்டு.

ஆதலால், தமிழ்நாட்டு விடுதலை இயக்கம் இவ்வய்யங்கார் “சுவாமி”களிடத்திலேயே அடங்கிவிட்டது. இதை அநுசரித்து தேர்தல் பிரசாரமும் வெளிக்கிளம்பி விட்டது. இதற்காக ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் காங்கிரஸ் கட்சியின் வேலைத் திட்டம் என்கிற ஒரு ஆயுதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனுடைய உத்தேசம் தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதாரை ஏமாற்றுவதற்கு இவ்வாயுதம் போதுமா, போதாதாவென்று பரீக்ஷை பார்ப்பதற்காக
அனுப்பப்பட்ட முதல் ஆயுதமென்றே நினைக்கிறேன். அத்திட்டத்தில் உள்ள தத்துவங்களாவன.

1. ‌இரட்டையாட்சியில் உண்மையான அதிகாரமும் பொறுப்பும் இல்லை யென்பதும் அதில் சச்சரவுக்கும் பிளவுக்கும்தான் இடமிருக்கிறதென்பது.

2. இம்முறை அமுலுக்கு வந்த 6 வருட அநுபவத்தில் அதிகச்
செலவும் விண் பிரயாசையும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய ஏதுமில்லாமலிருப்பதால் இம்முறையை நிராகரிக்கும்படி வோட்டர்களைக் காங்கிரஸ் கட்சி வேண்டிக் கொள்கிறது

3. ஆறு வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியின் மந்திரி பதவிகளை வகித்து‌ வருகிறார்கள் அவர்கள் ஜனங்களுக்கு நம்பிக்கை பெறத்தக்க ஒரு காரியத்தையும் செய்யவில்லை. சுயராஜ்யமடைவதற்குப் பாதகம் செய்திருக்கிறார்கள் ஆதலால், ஜஸ்டிஸ் கட்சியாருக்கு வோட் செய்யாமல் காங்கிரஸ்காரர்களுக்கே வோட் செய்து சட்டசபைக்கு
அனுப்பவேண்டுமென்பது.

4. காங்கிரஸ் கட்சி அபேக்ஷகர்கள் அப்போதைக்கப்போது காங்கிரஸ் கமிட்டியாரால் பிறப்பிக்கப்படும் உத்திரவுப்படி நடப்பதாகப்பிரமாணம் செய்வார்கள் என்பது.

5. தேசத்திற்கு விடுதலை அளிக்க வல்லது சாத்வீக சட்ட மறுப்பு
தான் என்றும், ஆனால் தேசம் அதற்குத் தயாராயில்லை யென்றும், ஆதலால் காங்கிரஸ் கட்சியானது சுயராஜ்யத்திற்கு தடைவிளைவிக்கக்கூடிய காரியங்கள் சர்க்காரால் செய்யப்பட்டாலும், மற்றவர்களால் செய்யப்பட்டாலும், எதிர்த்துப் போராடுவதென்றும் உறுதி கூறுகிறது‌.

6. கான்பூர் காங்கிரஸ் தீர்மானத்தில் சொல்லியுள்ள நிபந்தனைகளுக்கு சர்க்காரார் திருப்தியான பதிலளிக்கும் வரை உத்தியோகம் ஏற்காத கொள்கையை அநுசரிக்கின்றதென்றும், நிர்மாணத்திட்டத்தைச் சட்டசபையில் நிறைவேற்றி வைக்கப் பாடுபடுமென்றும், எல்லா ஜாதியினருக்கும் சம அந்தஸ்தும் சந்தர்ப்பங்ககளும் அளிக்கவேண்டுமென்பதை ஆதரிப்பதாகவும், சென்னை சட்டசபையில் பூரண மதுவிலக்குக்காக அதிகப்படி எதிர்த்துப் போராடுமென்றும், இன்னும் பல ஆசை வார்த்தைகளையும் சென்ற தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை விட இன்னும் சில புதிய வாக்குறுதிகளையும் கொடுத்திருப்பதாகக் காண்கிறது

இவைகளுக்குச் சமாதானம் எழுதுவதற்கு முன் ஒரு சிறு பழமொழியைச் சொல்லி விளக்கிவிட்டு பின்னால் சமாதானம் சொல்வேன். ஒரு பிராமணன் ஒரு கலியானத்தில் தட்சணை வாங்கும் போது ஆத்மஸ்துதி,‌ பரநிந்தை திரவியாபேட்சை ஆகிய மூன்றையும் வெறுத்து, நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்துநாலுழ அந்த சொல்லும் வார்த்தையிலேயே
அவருடன் தலை சிறந்து விளங்குவதைப் பார்க்கலாம். அதாவது ஆத்மஸ்துதி இல்லையென்கிறார்; நாலு வேதம், ஆறு சாஸ்திரம் முதலியவற்றைநெட்டுருப்பண்ணின கனபாடிகள் என்று சொல்லுகிறார். பரநிந்தையைவெறுத்தேனென்கிறார். எதிரில் இருப்போனை ஒன்றுத் தெரியாத தற்குறி என்கிறார். திரவியாபேட்சை இல்லை என்கிறார். அவனுக்கும் இரண்டணா எனக்கும் இரண்டணாவா என்கிறார்.

இது போல நமது சுயராஜ்யக் கட்சி காக காங்கிரஸ் போட்டிருக்கும்
திட்டமும் இருக்கிறது. அதாவது
1. மேல்கண்ட காங்கிரஸ் திட்டத்தில் இரட்டையாட்சியில் உண்மையான அதிகாரமும், பொறுப்பும் இல்லையென்பதும், அதில் சச்சரவுக்கும், பிளவுக்கும்தான் இடம் இருக்கிறதென்பது”.

சுயராஜ்யக் கட்சிரயார் இம்மாதிரி நினைப்பது வாஸ்தவமானால் இவர்கள் அவ்விரட்டையாட்சி ஸ்தாபனத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசியமென்ன? அந்த ஸ்தாபனத்தில் பொறுப்புமில்லை; சச்சரவுக்கும் இடமிருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் பொறுப்புள்ளவர்களும்,
சச்சரவு வேண்டாதவர்களுமான யோக்கியர்களாகிய சுயராஜ்ய கட்சி யாருக்கு அங்கு என்ன வேலை? இதிலிருக்கும் இரகசியத்தை வாசகர் கள் தான் தயவு செய்து கவனிக்க வேண்டும்.

2. “இம்முறை அமலுக்கு வந்த 6 வருஷ அநுபவத்தில் அதிகச் செலவும் வீண் பிரயாசையும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல்,
ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய ஏதுவில்லாமலிருப்பதால், இம்முறையை நிரா கரிக்கும் படி வோட்டர்களைக் காங்கிரஸ் கட்சி வேண்டிக் கொள்கிறது” என்பது.

அதிகச் சிலவும், வீண் பிரயாசையும் ஏற்பட்டு ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய ஏதுவில்லாத ஸ்தாபனத்தைக் காங்கிரஸ்காரர் நிராகரிப்பதென்றால் அதற்கு அர்த்தமென்ன? மகாத்மா காந்தி சொன்னபடி அந்த ஸ்தானங்களையே நிராகரிப்பதா? அல்லது அந்த ஸ்தானங்களில் உள்ள
வர்களை வெருட்டிவிட்டு தேச மக்கள் பணச் சிலவில் சுயராஜ்யக் கட்சியார்போய் உட்கார்ந்துக்கொண்டு, அந்த ஸ்தானங்களால் உணாடாகக் கூடியகாரியமாகிய, அதிகச் சிலவையும், வீண் பிரயாசையையும், கட்சிப் பிளவுகளையும் சுயராஜ்யக் கட்சியார் செய்ய காங்கிரஸ்காரர்கள் வோட்டு சம்பாதித்துக் கொடுப்பதாவென்பதை ஊன்றிக் கவனித்தால் சுயராஜ்யக் கட்சியின் காங்கிரஸ் திட்டத்தின் தத்துவம் வெளியாகும்.

3. “ஆறு வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவிகளை வகித்து வருகிறார்கள்; அவர்கள் ஜனங்களுக்கு நம்பிக்கை பெறத்தக்க – காரியத்தையும் செய்யவில்லை. சுயராஜ்யமடைவதற்குப் பாதகம் செய்திருக்கிறார்கள். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு வோட் செய்யாமல் காங்கிரஸ்காரர்களுக்கு வோட் செய்து சட்டசபைக்கு
அனுப்ப வேண் டும்” என்பது.

இரட்டையாட்சியின் அமைப்பு பொது ஜனங்களுக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாதென்றும், அதில் நன்மை செய்யக்கூடிய ஒரு விதமான யோக்கியதையும் இல்லையென்பதும், சச்சரவுக்கும், பிளவுக்கும் இடமிருக்
கிறதென்பதையும் காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டு, மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஒன்னும் செய்யவில்லையென்று அவர்கள் மீது பழி சொல்லுவதின் அர்த்தமென்ன? அந்த ஸ்தானங்களில் இடமிருந்து நன்மை செய்
யவோ, பொறுப் பேற்கவோ இடமிருந்து, ஜஸ்டிஸ் கட்சிக்காரர் செய்யாமலிருந்தால் ஒரு சமயம் ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர் பேரில் குற்றம் சொல்ல்எெலாம். அப்படி யிருக்க செய்வதற்கு இடமில்லாத ஓர் காரியத்தை ஜஸ்டிஸ் கட்சிக்காரர் செய்யவில்லையென்று சொல்வது யோக்கியமாகுமா? அவ்வளவுடன் நிற்காமல், அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு திராம் வாரு என்பது போல், ஜஸ்டிஸ் கட்சியாருக்கு வோட் செய்யாதேயுங்கள் எங்களுக்கு வோட் செய்யுங்கள் என்று சொல்லுவது இருக்கிறது. இம்மாதிரியான நாணயமற்ற வார்த்தைகள் தனிப்பட்ட ஹோதாவில் ஒவ்வொருவர் சொல்லிக்கொண்டு போனாலும் ஒரு விதத்தில் சகிக்கலாம். ஆனால், காங்கிரஸின் பேரால் இம்மாதிரியான ஆபாசங்கள் வெளியிடுவதை எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியுமென்பதை வாசகர்கள்தான் உணர்ந்து கொள்ளவேண்டும்.

4. “காங்கிரஸ் கட்சி அபேக்ஷகர் அப்போதைக்கப்போது காங்கிரஸ்
கமிட்டியாரால் பிறப்பிக்கப்படும் உத்திரவுப்படி நடப்பதாகப் பிரமா
ணம் செய்வார்கள்” என்பது, சந்தையும் ஒருவருடைய தாயிருந்து
அதில் கொள்ளையடிப்பதும் அவராகவேயிருந்து விட்டால் அப்புறம் அவர்களைக் கேட்கிறவர்கள் யார்? அதுபோல காங்கிரசும், காங்கிரஸ் நிர்வாகமும், சட்டசபைக்குப் போகிறவர்களும் ஒரே கூட்டத்தினராயிருக்கும் போது வேறு யாருக்கு ஜவாப்தாரியாயிருக்கக் கூடும்? வேறு யார்தான் இவர்களைக் கேட்கக்கூடும். மிஞ்சி யாராவது கேட்டால் கேட்பவர்களை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களென்று சொல்லிவிடுகிறார்கள்.ஆதலால், இந்த வாக்குறுதிகளினால் என்ன பிரயோஜனம்?

5. “தேசத்திற்கு விடுதலை அளிக்கவல்லது சாத்வீக சட்ட மறுப்புத்தான் என்றும், ஆனால் தேசம் அதற்குத் தயாராயில்லை யென்றும், ஆதலால் காங்கிரஸ் கட்சியானது சுயராஜ்யத்திற்கு தடை விளைவிக்கக் கூடிய காரியங்கள் சர்க்காரால் செய்யப்பட்டாலும், மற்றவர்களால் செய்யப் பட்டாலும் எதிர்த்துப் போராடுவதென்றும் உறுதி கூறுகிறது” என்பது.

சட்ட மறுப்பினால்தான் தேசத்திற்கு விடுதலையென்று வாயில்
சொல்லிட்டு, தேசம் சட்ட மறுப்புக்கு லாயக்கில்லையென்று சொல்லுவதாயிருந்தால் சட்ட மறுப்பைப் பற்றி பேசுவதில் பிரயோஜனம் என்ன? சட்டமறுப்பைப் பற்றி பேசுகிற சுயராஜ்யக் கட்சியாரும் “சட்ட மறுப்பு என்கிற வார்த்தை சுயராஜ்யக் கட்சியிலிருந்து வருவதால்” சுயராஜ்யக் கட்சியை நான்
மெச்சுகிறேனென்று சொல்லும், திரை மறைவிலிருக்கும் சுயராஜ்யக் கட்சியாரும் ஆகியவர்களுக்கு, சட்ட மறுப்பு நமது தேசத்தில் மும்முரமாக இருந்த காலத்தில் இவர்களுக்கு அதில் நம்பிக்கையிருந்ததா? ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தமிழ்நாட்டில் சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் போது இச்சட்ட மறுப்பு வீரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்க வில்லையா? சட்ட மறுப்பு இருக்கிற காலத்தில், நம்பிக்கையில்லை, நம்பிக்கையில்லை என்று சொல்லி வக்கீல் உத்தியோகத்திலும், பத்திரிகை உத்தியோகத்திலும் மாதம் 1000, 10000, மாகப் பணம்
சம்பாதித்துக் கொண்டிருந்த தோடு, சட்ட மறுப்பையும் தோல்வியுறச் செய்து விட்டு தேசமெல்லாம் ஒற்றுமையாயிருந்து ஒருமிக்கச் செய்தும், தோல்வியுற்றுறப் போன சட்ட மறுப்பைப் பாமர ஜனங்களை ஏமாற்ற வாயிற் சொல்லுவதும், அதுவும் சட்டமறுப்புக் காலத்தில் ஒளிந்து கொண்டு திரிந்த பயங்காளிகள் வாயில் வருவதும், யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் பாமர ஜனங்களுக்கு விளங்காமற் போகாது. ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காரும், ஏ ரங்கசாமி ஐயங்காரும், சத்தியமூர்த்தியும், சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரும், ஆதிநாராயண செட்டியாரும், திரு.வி.கலியாணசுந்தர முதலியாரும், எம்.கே. ஆச்சாரியாரும் சட்ட மறுப்பைப் பற்றிப் பேசுவதும், சட்ட மறுப்பு காங்கிரஸில் இருப்பதி னால் நாங்கள் சந்தோஷப்படுகிறோம், ஆதலால், சுயராஜ்யக் கக்ஷிக்கு வோட் கொடுங்களென்று சொல்லுவதும்
எவ்வளவு கண்ணியமற்ற காரியமென்பது வாசகர்கள்தான் அறியவேண்டும். சட்ட சபையில், சுயராஜ்யத்துக்கு விரோதமான காரியத்தை எதிர்த்துப் போராடுவோமென்று சொல்லுகிறவர்கள் எங்கெங்கு போராடி என்னென்ன பலனை அடைந்தார்கள்? பூரண மெஜாரிட்டியுள்ள மாகாணங்களிலாவது போராடி பலன் அடைய முடிந்ததா?

6. “கான்பூர் காங்கிரஸ் தீர்மானத்தில் சொல்லியுள்ள நிபந்தனைக
ளுக்கு சர்க்காரார் திருப்தியான பதிலளிக்கும் வரை உத்தியோகம்
ஏற்காத கொள்கையை அநுசரிக்கின்றதென்றும், நிர்மாணத்
திட்டத்தைச் சட்ட சபையில் நிறைவேற்றி வைக்கப் பாடுபடுமென்றும், எல்லா ஜாதியினருக் கும் சம அந்தஸ்தும், சந்தர்ப்பங்களும் அளிக்க வேண்டுமென்பதை ஆதரிப்ப தாகவும், சென்னை சட்டசபையில் பூரண மதுவிலக்குக்காக அதிகப்படி எதிர்த்துப் போராடுமென்றும், வாக்குறுதிப்படி நடப்போம் என்றும் சொல்லுவது”.

சகல சமூகத்துக்கும் சம அந்தஸ்துக் கொடுக்கிறவர்கள் சென்ற
வருடம் இந்தியா சட்டசபைக்கும், இராஜாங்க சபைக்கும் எத்தனை பிராமணர்களை நிறுத்தினார்கள்? எத்தனை பிராமணரல்லாதாரை நிறுத்தினார்கள்? என்பதைக் கணக்குப் பார்த்தால் இந்த வார்த்தையின் உண்மை தெரியும். தாழ்ந்த வகுப்பாருக்கு சுயராஜ்யக் கக்ஷியின் மூலம் தேர்தலுக்காக
ஏற்பாடு செய்திருக்கிறார்கள்? எம் மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்? ஸ்ரீமான் ஜயவேலுக்கு பத்து, ஐந்து கொடுத்து கூட்டிக்கொண்டு திரிவதனாலேயே தாழ்ந்த வகுப்புக்கு நன்மை செய்ததாக ஏற்பட்டு போய்விடுமா? அல்லாமலும் மதுவிலக்குக்காக முக்கியமாய் வேலை செய்யப் போவதாக ஓர் ஆசை வார்த்தைக் காட்டுகிறார்கள், இது ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரால் சுயராஜ்யக் கக்ஷியின் வெற்றிக்கு ஏற்பட்ட ஒர் புதிய மருந்து. இதை எப்படிப் பொது மக்கள் நம்ப முடியும்? ”ஒன்றுக்கும் உதவாது சட்டசபையில் – சச்சரவுகளும், பிளவுகளும், அதிக சிலவும் வீண் வேலையும் ஏற்படும் சட்டசபையில்” எப்படி மதுவை விலக்க முடியும்?

இவ்வளவு தூரம் ஜனங்களை ஏமாற்றத் துணிந்த சத்தியக் கீராத்த்திகளால் தேசத்திற்கு நன்மைகள் ஏற்படும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமென்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

மேலும், சர்க்காரிடம் தேச நன்மைக்காக இப்போதுள்ள சட்ட சபைகளில் கேட்க கூடிய காரியம் ஒன்றுமில்லையென்றும், ஆகக்கூடியதும் ஒன்றுமில்லையென்றும் மகாத்மா காந்தி முதல் காங்கிரஸிலிலுள்ள ஒவ்வொருவரும்‌‌ ஒப்புக்கொண்டுதான் காங்கிரஸில் ஒத்துழையாமை திட்டம் நிறை
வேறிற்று. அப்படி இருக்க இப்பொழுது மாத்திரம் சட்டசபையில் என்ன காரியம் கேட்கமுடியும்? ஆனாலும் சுயராஜ்யக் கக்ஷியின் சர்வாதிகாரியான ஸ்ரீமான் நேரு உள்பட பலர் மிதவாதக் கட்சியாரையும் சேர்த்துக் கொண்டு பல தேவைகளைக் கேட்டு பெரும்பான்மையான வோட்டுகளால் சட்ட சபையில் நிறைவேற்றியும், சாக்காரார் அவற்றைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதையும் பார்த்துவிட்டு, மறுபடியும் சாக்காரைக் கேட்கிறோம் என்று சொல்லுவதின் அர்த்தம் என்ன? அப்படியே இருந்தாலும் சர்க்காரார் திருப்தியான பதில் அளித்தார்களா? இல்லையாவென்று சொல்லுவதற்கு‌‌ அதிகாரி யார்? யார் கேட்கிறார்களோ அவர்களேதான் பெரும்பாலும்
அதிகாரிகளாயிருக்கின்றார்கள். தமிழ்நாட்டுப் பிராமணர்கள் கைக்கு மந்திரி ஸ்தானங்கள் கிடைக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டால், சர்க்காரார் சுயராஜ்யக்கஷிக்கு தக்க பதிலளித்து விட்டார்களென்றுதான் அர்த்தம்! அந்த நிலைமை ஏற்படும் வரை சர்க்கார் தக்க பதில் அளிக்கவில்லையென்று தான்
சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அல்லாமலும் அதுவரை உத்தியோகங்களை ஒப்புக் கொள்ளு தில்லையென்று சொல்லுவதற்குத் தான் அர்த்தம் எங்கேயிருக்கிறது. ஸ்ரீமான்கள் நேரு உத்தியோகம் ஒப்புக் கொண்டாகிவிட்டது; படேல் உத்தியோகம் ஒப்புக் கொண்டாகிவிட்டது; ஏ. ரெங்கசாமி
ஐயங்காரும் உத்தியோகம் ஒப்புக் கொண்டாகிவிட்டது மற்றும் பல சுயராஜ்யக் கட்சிப் பதிவிரதைகளும் உத்தியோகம் ஒப்புக் கொண்டாகிவிட்டது; அது மாத்திரமல்ல சுயராஜ்யக் கட்சியில் இப்போதுள்ள மெம்பர்களிலும் ராவ்சாஹிப், ராவ்பஹதூர், திவான் பஹதூர்களும், தாலுக்கா போர்டு,ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி யூனியன், பஞ்சாயத்து செனட்சயை, ஜெயில் கமிட்டி முதலிய பல ஸ்தானங்களில் சர்க்கார் தயயை நாடி நியமனம் பெற்ற மெம்பர்களும் நிறைந்திருக்கிறபோது நாங்கள் சர்க்கார் உத்தியோகத்தைப் பெறமாட்டோமென்று சொல்லுவது எவ்வளவு யோக்கிய மானபேச்சென்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

சம்பளமில்லாத இந்த உத்தியோகங்களையே பெறுவதற்கு ஆத்திரப்பட்டுக் கொண்டு திரிகிறார்கள் சம்பளமுள்ள உத்தியோகம் கிடைப்பதாயிருந்தால் இவர்கள் வேண்டாமென்று சொல்லி விடுவார்களென்று சொன்னால் எந்த பயித்தியக்காரனாவது நம்பிவிடுவானா? அல்லாமலும்
வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் களெள்றும் மறுபடியும் ஒரு முறை சொல்லி புதுப்புது வாக்குறுதிகள் செயவதை யார் நம்ப முடியும்? மூன்று வருடங்களுக்கு முன் செய்த வாக்குறுதிகளெல்லாம் இப்போது எங்கே போய்விட்டது?
சட்டசபையில் போக்குவரத்து வழிச்சிலவுகூட வாங்க மாட்டோமென்று சொல்லிப்போன சுயராஜ்யக் கட்சிப் பிரபுக்கள் பொய் பில் கொடுத்து ஒன்று இரண்டாகப் பணம் வாங்குவதை நன்றாய்ப் பார்க்கிறோம். இதைப் பற்றி யாராவது கேட்டால், ஐயோ பாவம்! பிழைத்துப் போகட்டுமே, அவருக்கு
இதைத் தவிர வேறு வழி என்னவென்று சொல்லி மழுப்பி விடுகிறார்கள் இப்படியிருக்க, இவர்கள் வாக்குத்தத்தத்தை வேகமாகய் ஓடுகிற தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். பொய்ச் சத்தியம் செய்வதில்லையென்று ஓர் புதுச் சத்தியம் செய்தால், அது பழைய சத்தியத்தோடு சேருவதற்கு எத்தனை நாள் ஆகும். அல்லாமலும் தேர்தல்களுக்காகச் செய்யும் சத்தியங்களில் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாதென்றே “காங்கிரஸ் மநுதர்ம சாஸ்திரம்” சொல்லுகிறது. ஆப்படியிருக்க இவைகளினாலெல்லாம் என்ன காரியம் ஆகிவிடும். தற்காலம் மந்திரி‌ பதவியை வகிக்கும் பிராமணரல்லாதார் செல்வாக்கை எப்படியாவது ஒழித்து அதைப் பிராமணாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டுமென்பதே நமது பிராமணர்களின் முக்கியத் தத்துவமாகப் போய்விட்டது என்பதை நான் நெருப்பின் மேல் நின்று சொல்லவும் தயங்கேன். அம்மாதிரி செய்வதற்கும் அவர்களுக்கு பாத்தியமுண்டு என்பதையும் நான் ஒருக்காலும் மறுக்கமாட்டேன் ஆனால், அதற்காகக் காங்கிரஸின் பெயரையும் மகாத்மாவின் பெயரையும் தேசத்திற்காகத் தியாகம் செய்த கஷ்டப்பட்ட – தேச பக்தர்களின் செய்கையின் பலனையும் உபயோகப்படுத்திக் கொள்ளுவதைத்தான் விபசா
ரத்தனத்தைக் காட்டிலும் இழிவான காரியமென்பதை சொல்லி இவ்வியாசத்தை முடிக்கிறேன்.