அந்தணர்பேட்டை கதர் விஷயமாய் கதர் போர்டு அதிகாரிகள் பரீக்ஷை செய்துப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால், அவ்விடம் தயார் செய்யப்பட்ட கதர்த் துணிகளில் சிலது நூல் சன்னமாயும் ஒரே மாதிரியாயும் இருந்ததோடு, அதிகக் கெட்டியாகவும், பார்வைக்கு மில் துணி போலவும் இருந்தது. இவ்வளவு நல்ல துணி சுத்தமான கதர் துணியாய், இவ்வளவு குறைந்த அதாவது சாதாரண கதர்த் துணி விலைக்கு கொஞ்சம் ஏறக்குறைய இருக்குமா என்கிற சந்தேகத்தின் பேரில் அதை அநுபோக சாலிகளான இரண்டொருவருக்கு பரீக்ஷைக்காக அனுப்பப்பட்டது பரிக்ஷையில், பரீக்ஷகர்கள் அது கதராயிருக்க முடியாதென்று அபிபராயப்பட்டதால், உடனே அதற்கு கதர் போர்டாரால் அளிக்கப்பட்டிருந்த நற்சாக்ஷிப் பத்திரதை வாப்பீசு அனுப்பும்படி எழுதிவிட்டு பத்திரிகைகளுக்கும் அந்தணர்பேட்டை கதர் சுத்தமான கதர் அல்ல என்பதாக அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகு அந்தணர்பேட்டைக் கதராலயத்தார் தங்கள் ஆவலாதியைத் தெரிவித்துக் கொண்டதன் பேரில், காரியதரிசி ஸ்ரீமான் ராமநாதன் நேரில் போய் பார்த்து அந்தணர்பேட்டைக் கதர் சுத்தமான கதர் என்றும், அதில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்றும் மனப்பூர்வமாய் அறிந்ததின் பேரில் பரீக்ஷையில் தவறிப் போனதற்கும் அந்தணர்பேட்டை கதராலயத்திற்கு, கெட்ட பேர் ஏற்படவேண்டி வந்ததற்கும் தாம் மிகவும் வருந்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதை முடிவில் பிரசுரித்திருக்கிறோம். கதர் போர்டார் பரீக்ஷையில் தவறிவிட்டதினால் முடிவாக அந்தணர்பேட்டை கதருக்கு உண்மையில் நன்மை ஏற்பட்டதே தவிர, கெடுதி ஒன்றும் ஏற்படவில்லை. எப்படி என்றால், தமிழ்நாடு கதர்போர்டார் தமிழ்நாட்டில் சுமார் முப்பது நாற்பது கதர்ச் சாலைகளுக்கு மேல் சுத்தமான கதர் என்பதாக நற்சாக்ஷிப் பத்திரம் கொடுத்திருந்தபோதிலும் அவையெல்லாம் உத்தேசத்தின் பேரிலும், மனிதர்களுடைய யோக்கியதையின் பேரிலும், அக்கம் பக்கம் விசாரித்ததின் பேரிலும், ஆள்களை விட்டு அறிந்து வரச்சொல்லுவதின் பேரிலும்தான் நம்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தணர்பேட்டைக்கும் முன் இப்படித்தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது காரியதரிசி ஸ்ரீமான் ராமநாதன் அந்தணர் பேட்டைக்கு நேரில் போய் ஒவ்வொரு தறிகளையும் ஒவ்வோரு ராட்டைகளையும் வேலை செய்யும் போது நேரில் பார்த்தும், கணக்குகளை ஆதியோடந்தமாய் பரிசோதித்துப் பார்த்தும் பல வழிகளிலும் சந்தேகமற திருப்தியடைந்து மறுபடியும் புதிதாக நற்சாக்ஷிப் பத்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கதர் போர்டாரால் நற்சாக்ஷிப் பத்திரம் பெற்ற சுமார் 30, 40 கதர்ச்சாலைகளில் ஒன்றாவது, அந்தணர்பேட்டை கதர்ச் சாலைபோல் அவ்வளவு தூரம் பரீக்ஷை செய்து திருப்தி அடைந்து கொடுக்கப்பட்டிருக்காது என்றே நினைக்கிறோம். ஆதலால் அந்தணர் பேட்டை கதர்ச் சாலையை கதர் போர்டார் சந்தேகப்பட்டு அதன் நற்சாக்ஷிப் பத்திரத்தை ஒரு தடவை ரத்து செய்து மறுபடியும் கொடுத்ததானது ஷை‌ கதர்ச் சாலையானது தனது பரிசுத்தத்தைப் பற்றி நெருப்பில் குளித்து வெளியில் வந்தது போல் ஆகிவிட்டது. எதுவும் நள்மைக்காகத்தான் என்று பெரியவர்கள் சொல்லும் வாக்கு இது விஷயத்தில் சரியாய் பலித்திருக்கிறது