சுயராஜ்யக் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களும்
ஜஸ்டிஸ் கட்சி, மிதவாத கட்சி தேசீயக் கட்சி ஆகியவைகளைச் சேர்ந்தவர்களும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துபவர்களும், சுயராஜ்யக்கட்சி பிராமணக் கட்சி என்று முடிவு செய்துக் கொண்டிருக்கிறவர்களும், பழைய ஒத்துழையாமைத் தத்துவத்திலேயே நம்பிக்கை இருக்கிறவர்களும், சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாரை ஒடுக்க வந்த கட்சியென்று நினைத்து சுயராஜ்யக் கட்சியை பஹிஷ்கரிக்கவோ அதை ஒழிக்கவோ பிரசாரம் செய்ய
வேண்டுமென்கிறவர்களும், நிர்மாணத் திட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் காங்கிரசில் இருக்கலாமா? என்றும் இவர்களில் யாரையாவது காங்கிரஸை விட்டுப் போகச் சொல்ல யாருக்காவது உரிமை உண்டா? என்றும் இன்னும் பலர் பலவிதமாக நம்மை நேரிலும், எழுத்து மூலமாகவும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள். இந்தியா நீதியும் அமைதியும் வழிகளில் சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற தத்துவத்தை ஒப்புக்கொள்ளுபவர்களான எல்லோரும் காங்கிரஸிலிருக்க பாத்தியமுடைவர்கள். அதின் திட்டங்களில் அவநம்பிக்கையும் அபிப்பிராய பேதமும், எதிர்ப் பிரசாரம் செய்ய வேண்டிய
அவசியமும் இருப்பதினாலேயே காங்கிரஸை விட்டுப் போய்விட வேண்டும் என்று யாரும் நினைக்க வேண்டியதில்லை. உதாரணமாக, கயா காங்கிரஸ் தீர்மானத்திற்கு விரோதமாய் பிரசாரம் செய்த ஸ்ரீமான் தாஸ் – நேரு கோஷ்டி
யாரும் தமிழ்நாட்டில் டில்லி காக்கிநாடா காங்கிரசுக்கு விரோதமாய்ப் பிரசாரம் செய்த ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், ஈ.வெ ராம சாமி நாயக்கர், எஸ். ராமநாதன் முதலியோரின் அபிப்பிராயம் கொண்ட கோஷ்டியாரும் காங்கிரஸிலிருந்து கொண்டே தங்கள் பிரசாரத்தை செய்து வந்திருக்கிறார்கள்
என்பதையும், இனியும் தங்களுக்கு இஷ்டமில்லாத விஷயங்களில் செய்து கொண்டுமிருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்