நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத்தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப்படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
அனால், நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின்றோமென்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் நல்லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்புநலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத்தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள்ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும்.

தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப்பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது. இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப்பாருடையவும் ஈனஸ்திதியை விளக்குவதோடு,முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல்லாண்மைக்கென ஏற்பட்ட
பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண்மை யாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி
தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும். நாட்டு நலன்களில் சம உரிமை அடையவும் மார்க்கமில்லாதிருக்கும்போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவு களை உண்டாக்கும் என சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைளையும்நாசமாக்கி. ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்?நமது
நாட்டில் பல வகுப்புகளி ருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கினாறதா? தேசத்திற்கு வரும்ஆக்கம் பல வகுப்புகளுக்குள் சரிவரப் போய்ச் சேர மார்க்கம் இருக்கிறதா?
என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும். அப்படிக்கின்றி முன்னாலிருக்கின்ற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டு நலம், நாட்டு நலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப் போகும் என்றும் சொல்லிக்
கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் க்ஷேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் க்ஷேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டு நலம்தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டுநலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல. “வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடைத்தாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகி விடும்; ஆதலால் நாட்டு நலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான்
அநுகூலமானது” என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவே எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியது தான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை,

நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும் தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான்.
அவை பிராமணர்-பிராமணரல்லாத இந்துக்கள் – பஞ்சமர் என்று
கூடிய சொல்லக்கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட – உரிமை தேடுவோர் உள்பட – எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது.
ஆந்திரர் -தமிழர்-கர்நாடகர்-கேரளர் என்கிற பிரிவைச் சொல்லி ஜனங்களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனியாகவே‌ பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே
பிரித்தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். “இவர்களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும்” என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும்கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியாதென்று பயப்பட வேண்டியதில்லை.
வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களும் ஸ்தானங்களும் அமைக்கவும் சவுகரியமிருக்கிறது. 3 1/2 கோடி ஜனங்கள் உள்ள இஙாகிலாந்து பார்லிமென்ட்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜுய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது
கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப் படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டிஇருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டிய தில்லை.அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிற தாக நினைத்துக்
கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு
மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர்களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும் தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் – பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளுகிறார்கள். பிராமணரல்லாதாரும் மேற்
சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழபஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்
பட்ட வகுப்பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம்மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக்கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள்ளுவதால், இம் மூவருக்கும்தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும்படி
தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக்கும் ஒருவருக்கொருவர் உயர்வு – தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான், மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக்கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வருப்புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியதுமில்லை. வகுப்பின் பேரால் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல
வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அநுபவிப்பதற்கு அநுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் – கண்ணில் தென்படவும் அருகர்களல்லவென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப்படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக்காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல்லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில்லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமே தான் முடியும்.