சென்னை கார்பொரேஷனிலிருக்கும் சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர்கள் தங்களுக்கு நம்பிக்கையில்லாததும், தாங்கள் செய்யாததும். தாங்கள் எதிர்ப்பதுமான கதர் ராட்டினம் என்னும் விஷயங்களைக் கார்ப்பொரேஷனக்குள் புகுத்தி, பிராமணரல்லாதார் பேரில் பழியையும் வெறுப்பையும் பொது ஜனங்களுக்கு உண்டாக்குவதற்காக பல தந்திரங்கள் செய்கின்றார்கள்.
அதாவது கார்பொரேஷன் சிப்பந்திகள் கட்டாயமாக கதர் உடுத்த வேண்டும் என்கிற ஓர் தீர்மானத்தையும், கார்பொரேஷன் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளெல்லாம் கைராட்டினம் சுற்ற வேண்டுமென்கிற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்கள், இவ்விரு தீர்மானங்களையும் சுயராஜ்யக் கஷியார் தங்கள் திட்டத்தில் ஒன்றாய் ஒப்புக் கொள்ளுவதுமில்லை; தாங்களும் நடவடிக்கையில் செய்வதில்லை. கதரைப்பற்றிக் கார்பொரேஷன் சபைக்கு வரும்போது மாத்திரமும், வோட்டுக் கேட்கும் போது மாத்திர மும்தான் கதர் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ராட்டினத்தைப் பற்றியோவென்றால், அது மகாத்மா பார்த்துக்கொள்ள வேண்டுமென்று விட்டு விட்டார்கள். இப்படி இருக்க இதை கார்பொரேஷன் சிப்பந்திகளுக்கு கட்டாயப்படுத்த சுயராஜ்யக் கக்ஷியாருக்கு யோக்கியதை எது? அப்படி இவர்கள் ஏதாவது தீர்மானம் கொண்டு வருவதாயிருந்தாலும், சம்பளம் வாங்கும்போது மாத்திரம் கதர் கட்டவேண்டுமென்று தீர்மானித்தால் அது சுயராஜ்யக் கொள்கைக்கு யோக்கியமானதாயிருக்கும்! அப்படிக்கில்லாமல் தாங்கள் மாத்திரம் வேஷத்துக்குக் கதர் கட்டவேண்டும். சிப்பந்திகள் மாத்திரம் எப்போதும் கதர் கட்டவேண்டுமென்று சொன்னால், குடிகாரர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்வது போலிருக்கின்றது. ராட்டினத்தைப் பற்றியும் இவர்கள் தீர்மானம் செய்வது, தாங்களும் ராட்டினம் சுற்றாமல், ராட்டினச் சங்கத்தில் தாங்கள் மெம்பராக இல்லாமல், தங்கள் பிள்ளைகளும் ராட்டினம் சுற்றாமல், ராட்டினம் சுற்றுகிறவர்களையும் பார்த்துச் சிரித்துக்கொண்டும் பரிகாசம் செய்து கொண்டும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை ராட்டினம் சுற்றக் கட்டாயப்படுத்துவது விபசாரிகள் கற்புப் பிரசாரம் செய்வது போலிருக்கின்றது. எனினும், இம்மாதிரியான தீர்மானங்களைப் பொது ஸ்தாபனங்களில் கொண்டு வந்து பேசுவதின் கருத்து. இவர்களைப் போல் வேஷம் போட இஷ்டமில்லாத ஜஸ்டிஸ் கக்ஷி முதலிய பிராமணரல்லாத மெம்பெர்கள் தங்கள் மனச்சாக்ஷியை எடுத்துச் சொல்லுவதின் மூலம், ஜனங்களுக்கு அவர்களிடம் ஒரு வெறுப்பை உண்டாக்குவதற்கு கண்டு பிடிக்கப்பட்ட ஒரு சூழ்ச்சி என்பது கடுகளவுள்ள ஞானமுன்ளவர்களுக்கும் நன்றாய் விளங்கும். எப்படியென்றால் காங்கிரசில் கதரையும். ராட்டினத் தையும் கட்டாயமாக மகாத்மா பிரேரேபிக்கும் போது. ஸ்ரீமான்கள் மோதி லால் நேரு, சீனிவாசய்யங்கார், ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி முதலிய பிராமணர்கள் எதிர்த்துப் பேசி அத்தீர்மானத்தைத் தோற் கடித்தது தேச பக்தியும் மனச்சாக்ஷியும்படி நடந்ததாயும் ஆகிவிடுகிறது! கார்பொரேஷன் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடு, சுந்தரராவு நாயுடு, ஓ. தணிகாசலம் செட்டியார் முதலிய பிரமாணரல்லாதார்கள் எதிர்த்தது தேசத் துரோகமும் அக்கிரமமும் ஆகி விடுகிறது. இதை யோசிக்கும் போது நமது நாட்டு ராஜ்ய வாழ்வு பிராமணர்கள் செய்வதெல்லாம் தேசபக்தியென்று சொல்வதாகவும், பிராமணரல்லாதார் செய்வதெல்லாம் தேசத் துரோகம் என்று சொல்வதாகவும் ஏற்பட்டு விட்டதாகத்தான் தீர்மானிக்கவேண்டும். அதோடல்லாமல் பிராமணரல்லாதாரிலேயே சிலபேர் இவற்றை ஆதரிக்கவும் இவ்வித பிராமணர்களுக்கு செல்வாக்கு தேடிக் கொடுக்கவும் பிராமணர்கள் வாலைப் பிடித்துக்கொண்டும், கவி பாடிக்கொண்டும் திரியவும் அவர்கள் செய்வது சரி, சரியென்று தங்கள் பத்திரிகைகளில் முழக்கம் செய்யவும் தயாராயிருக்கும் போது நாம் யாரை நோவது?