திருவாங்கூர் சமஸ்தானத்தில் புண்ணிய க்ஷேத்திரங்களாக பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவைகளில் வடக்கே வைக்கமும், மத்தியில் திருவனந்தபுரமும், தெற்கே சுசீந்திரமும் முக்கிய க்ஷேத்திரங்களாகும்.வைக்கம் சத்தியாகிரகத்தின் பயனாய் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள ரோட்டுகள் ஜாதி உயர்வு தாழ்வு இன்றி சகல பிரஜைகளுக்கும் சமமாய் உபயோகிக்க விட்டாய் விட்டது. மற்றும் சில ரோட்டுகளை சமமாய் உபயோகிக்க அரசாங்கத்தார் வேண்டிய உதவி செய்திருக்கிறார்கள், ஆதலால் இப்பொழுது திருவாங்கூரிலும், சுசீந்திரத் திலும், கோயிலைச்சுற்றியுள்ள – உள்ள பொது ரோட்டுகளில், மகாராஜாவின் எல்லாப் பிரஜைகளுக்கும் நடக்க உரிமை வேண்டுமென்று முயற்சிகள் நடந்து வரு கின்றன. இந்த தை மீ 5-ந் தேதி மாலை 4 மணிக்கு சுசீந்திரம் கோவிலைச் சுற்றி சகல இந்து ஜாதியாரையும் அழைத்துச் செல்லுவதாய் தீர்மானம் செய்திருக்கிறது. இதைப் பற்றிச் சர் கோவில் அதிகாரிகளுக்கும், மார்கழி மீ 28-ந் தேதி முன்னறிக்கை கொடுக் கப்பட்டிருக்கிறது. உரிமை தடுக்கப்பட்டால் சத்தியாக்கிரகம் நடத்தவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நமது குறிப்பு:

இம்மாதிரி நாகர்கோவிலைச் சேர்ந்த கோட்டார் டாக்டர் எம்.பெருமாள் நாயுடு அவர்கள் நமக்கு எழுதியிருக்கிறார். மழை விட்டும் தூற்றல் விட வில்லை என்று சொல்லுவது போல் வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்து தெருவில் நடக்கும் உரிமை பெற்றால், அது வைக்கத்திற்கு மாத்திரம்தான் செல்லும்; மற்ற இடங்களுக்குச் செல்லாது என்கிற வியாக்கியானம் செய்து கொண்டு, உங்கள் வர்ணாசிரமிகள் மறுபடியும் உபத்திரவம் செய்வதாய்த் தெரிகிறது. வைக்கம் சத்தியாக்கிரகம் சம்பந்தமாய் திருவாங்கூர் அரசாங்கத்தார் எவ்விதமான உத்திரவும் போடவேயில்லை. வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குச் சர்க்காரர் செய்த தெல்லாம் தெருவில் ஜனங்களைத் தடுக்க நிறுத்தி யிருந்த போலீஸ்காரர்களை எடுத்துவிட்டதுதான் அவர்கள் செய்த வேலை. இதற்காக ஓர் உத்திரவு போடும்படி சர்க்காரைக் கேட்டதற்கு அவர்கள் “தாங்கள் வெகு வருஷங்களுக்கு முன்பதாகவே, பொது ரஸ்தாக்களும், பொதுக்குளங்களும் ஜாதிமத வித்தியாசமில்லாமல் பொது ஜனங்கள் அநுபவிக்கத்தக்கது என்று உத்திரவு போட்டிருக்கிறோம்” என்று மறுமொழி சொல்லிவிட்டார்கள். ஆதலால், இப்பொழுது சர்க்காரார் பேரில் குற்றம் கூற இடமில்லை. பிராமணர்களொழிந்த, நாயர் முதலிய பிராமணரல்லாத உயர்ந்த ஜாதியாரென்று சொல்லப்படுகிறவர்களும், தங்கள் வகுப்பு மகாநாடுகளின் மூலமாக பொது ரஸ்தாக்களிலும், பொதுக்குளங்களிலும், சகல இந்துக்களும் தாராளமாய் நடமாடலாமென்கிற தீர்மானத்தையும் ஏகமனதாய்த் தீர்மானித்திருக்கிறார்கள். ஆதலால், இப்பொழுது சம உரிமைக்கு இடைஞ்சலாயிருப்பவர்கள் பிராமணர்களென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இம்மாதிரி ஒவ்வொரு காரியங்களுக்கும் சம உரிமைக்கு விரோதமாய் நின்று கொண்டு மனிதர்களைக் கொடுமைப்படுத்தும் இந்த ஜாதியார், எத்தனை நாளைக்கு இப்படியே வாழக் கூடுமென்று நினைக்கிறார்களோ தெரிய வில்லை. தமிழ்நாட்டுச் சகோதரர்களே! சுசீந்திரத்தில் டாக்டர் எம்.பெருமாள் நாயுடு அவர்கள் எழுதியிருப்பதுபோல் சத்தியாக்கிரகம் செய்யவேண்டிய அவசியமேற்படுமேயானால், வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு நமது கடமையைச் செய்தது போலவே. சுசீந்திரம் சத்தியாக்கிரகத்துக்கும் நாம் தயாரா யிருக்க வேண்டும். தமிழ்நாட்டின் சார்பாக டாக்டர் எம்.பெருமாள் நாயுடு அவர்களுக்கு, தமிழ்நாடு தனது கடமையைச் செய்யத் தவறாது என்று வாக்குக் கொடுக்கிறோம்.