தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் அவ்விடத்திய வெள்ளைக்கார்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக்குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக்காரர்கள் சட்டம்
செய்திருப்பதாகவும், இக்காரணங்களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லக்ஷம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து கொடுக்கும்படி நமது தேசீய காங்கிரஸை கேட்டுக் கொள்வதற்கு சிலர் அங்கிருந்து வந்திருந்ததும், அதற்கிணங்கி நமது தேசிய காங்கிரசும் மகாத்மா அவர்களின் அபிப்ராயப்படி ஓர்
தீர்மானத்தையும் நிறைவேற்றி, வந்திருந்தவர்கள் கண்ணைத் துடைத்து அநுப்பிவிட்டதும் வாசகர்கள் அறிந்த விஷயம்.

இதை அநுசரித்தே பிராமணரல்லாதார் காங்கிரசும் ஓர் தீர்மானத்தைச் செய்துவிட்டது. பத்திரிகைகளும் இதைப்பற்றி எழுதி தங்கள் கலங்களை நிரப்பிக் கொள்ளுவதற்கு ஓர் சந்தர்ப்பத்தையும் அடைந்து கொண்டது. முடிவென்ன? இவ்வித தீர்மானங்களால் வெள்ளைக்காரர்கள் பயப்படப்
போகிறார்களா? அல்லது தேசீய காங்கிரசினிடமாவது வெள்ளைக்காரர்களுக்கு மதிப்பிருக்கப் போகிறதா? நமது தேசீய காங்கிரஸோ ஜாலவித்தைக்காரனுடைய செய்கைகள் போலாகிவிட்டது. ஜாலவித்தைக்காரன் எப்படி
ஜனங்களை ஏமாற்றுவதற்கு தனது பைக்குள்ளிருந்து ஒவ்வொரு சாமானையும் வரவழைத்துக் காட்டிவிட்டு, கடைசியில் எப்படி நம்மை காசு கேட்க வருகிறானோ, அது போலவே காங்கிரசிலும் சிலரிருந்து ஜனங்கள் சந்தோஷப்படும்படி பல தீர்மானங்களை எழுதிக்காட்டி விட்டு கடைசியாக நம்மிடம்
ஓட்டுக்கேட்க வந்து விட்டார்கள். இவர்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது. இவர்களால் என்னென்ன காரியம் செய்ய முடியுமென்பது வெள்ளைகாரர்களுக்குத் தெரியுமா? தெரியாதா?”குப்பை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்
வானமேறி சந்திரனைப் பிடிப்பேனென்று” சொல்லுவது
நம்பத்தகுந்ததாயிருக்கும். அதுபோல, கல்பாத்தியில் நமது கண்ணுக்கெதிரில் நம்மிடம் வாங்கி தின்று பிழைக்க வேண்டியவர்கள் அவர்களைவிட கோடிக்கணக்காய் அதிகமுள்ள சமூகத்தாரை – இந்த நாட்டாரை – இந்நாட்டு ஆதி மக்களை
– தெருவில் நடக்கக் கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; கிட்ட
வரக்கூடாது; கண்ணில் தென்படக் கூடாது; அவர்கள் தெய்வத்தைக் காணக்கூடாது; அவர்கள் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று கொடுமைபடுத்துவதையும் அதற்காக 144 போடுவதையும் சகித்துக்கொண்டு அந்த 144 – ஐ மீற
முடியாமல் பயங்கொண்டு, புறமுதுகிட்டு ஓடிப்போகும் கூட்டத்தார் தென்னாப்பிரிக்கா வெள்ளையர்களை – துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, ஆகாயக் கப்பல் வைத்திருப்பவர்களை மிரட்டுவதென்றால், அவர்கள் எப்படி பயப்படக்கூடும்? நமது நாட்டிலுள்ள நம்மை அந்நிய நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள் செய்யும் கொடுமைகளை ஒழிப்பதற்கு நமக்கு யோக்கியதை இருந்து, ஒன்றுகூடி ஏதாவது ஓர் முயற்சி செய்து வெற்றி பெற்றோமானால் பிறநாட்டார் நம்மைக் கண்டால் கொஞ்சமாவது மதிப்பார்கள். அப்படிக் கின்றி தமது யோக்கியதை நமது நாட்டில் இப்படி இருக்க தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களை – பீரங்கி துப்பாக்கி, ஆகாயக் கப்பல், வெடிகுண்டு வைத்திருப்பவர்களை மிரட்டுவதில் என்ன பிரயோஜனம்? உண்மையில் தென்னாப்பிரிக்காவில் வெள்ளைக்காரர் நம்மை நடத்தும் விஷயம் நமக்கு அவமானமாயிருக்குமானால் இந்தியாவில் நம்மை ஒரு சிலர் நடத்தும் விஷயத்தை நாம் சித்துக் கொண்டிருக்க முடியுமா? நமக்கு ரோஷமிருக்கிறது என்பதை அந்நியருக்குக் காட்டிக்கொள்ள வேண்டுமானால், நமது
உடலை, பொருளை, ஆவியை விடத் தயாராயிருக்கிறோமா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராயிருக்கிறோமென்று நம் மனதே நமக்கு உறுதி சொல்லுமானால் இவற்றுக் கெல்லாம் தீர்மானமே
தேவையில்லை. மனதில் நினைத்தவுடனேயே வழி திறந்து விடும். சட்டங்களெல்லாம் சாம்பலாய்ப் போய்விடும். அப்படிக் கில்லாமல், இம்மாதிரி ஜாலவித்தையான தீர்மானங்களை வைத்துக்கொண்டு பிழைக்கப் பார்க்கிறோம். அதனால் பணம் சேர்க்கப் பார்க்கிறோம். பதவி பெறப் பார்க்கிறோம். இந் நிலையில் இத்தீர்மானங்களுக்கு எப்படி சக்தி உண்டாகும்? ஆதலால், உண்மையாய் இவ்வித கஷ்டங்களுக்குப் பரிகாரம் வேண்டுமானால், மகாத்மா சொல்வது போல் சத்தியாக்கிரகம் செய்வதும், அதன் மூலமாய் உடல், பொருள், ஆவி ஆகியவைகளைத் துறக்கத் தயாராயிருப்பதும் தவிர
வெறும் ஜாலவித்தைகளினால் பலன் ஏற்படாதென்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்