குடி அரசு – தலையங்கம் – 03.01.1926

இவ்வருடம் கான்பூரில் இந்தியாவின் விடுதலைக்கு உழைக்கும்
சபையென்னும், இந்திய தேசிய மகாநாடாகிய காங்கிரஸ், கான்பூரில் கூடிக் கலைந்தது.
இந்தியாவின் விடுதலைக்கும், இந்தியரின் சுயமரியாதைக்கும்.
அரசாங்கத்தை கொஞ்சமும் எதிர்பாராமலும், அவர்களின் அரசியல் மாய்கைகளை உபயோகப்படுத்திக் கொள்ளாமலும், அவர்களோடு விலகியிருந்து
நிர்மாணத்திட்டத்தை நிறைவேற்றி வைப்பதன் மூலமாகவே தியாகத்திற்கும்
கஷ்ட நஷ்டத்திற்கும், துணிவு கொண்டு உழைப்பதுதான் உண்மையான சுயராஜ்ய மார்க்கம் என்கிற உறுதியைக் கொண்ட கூட்டத்தார், இவ்வாண்டு
கான்பூர் காங்கிரஸில் சரிவரக் கலந்து கொள்ளவேயில்லை. மகாத்மா காந்தியும் தான் தனியாக நின்று நடத்துவதாய் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கதர் ஸ்தாபனமாகிய நூல் நூற்கும் சங்கத்தை ஏதாவது ஒழித்து விடுவார்களோ எனப் பயந்து அதைக் காப்பாற்றிக் கொள்ளும் வரை கூட இருந்து விட்டு. மற்றவைகளில் அவரும் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் மகாநாட்டுக்குக்கூட
வராமல், மெல்ல நழுவி விட்டார். காக்கிநாடாவில் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் “இன்னும் இரண்டு வருடத்தில் இந்த காங்கிரஸானது பழயபடி
பேச்சை விற்றுப் பிழைக்கும் வக்கீல் கூட்டத்தார் வசமும் படித்தவர்கள்
என்போர் கைவசமும் போய்விடப் போகிறது; உண்மையாய் தேசத்திற்கு உழைக்கிறவர்களுக்கு காங்கிரஸில் இடம் இருக்கப் போவதில்லை. ஆங்கிலம் படித்த சிலர் தங்கள் உத்தியோகமும், பதவியும் சம்பாதிப்பதற்காகவே
காங்கிரஸ் உபயோகப்படப் போகிறது; இதற்கே ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் வழி திறந்து விட்டு விட்டார். அவர் தமது தியாகத்தின் பலனாய் அடைந்த செல்வாக்கை இப்போது தன் கூட்டத்தவராகிய படித்த வகுப்பா
ருடைய நன்மைக்கே உபயோகப் படுத்துகிறார்” என்று கதறினது ஒரு
எழுத்துக்கூட பொய்யாகாமல் நடந்து போய்விட்டது.

தமிழ்நாட்டில் இருந்தும், மற்றும் பல மாகாணங்களிலிருந்தும்
ஒத்துழையாமையின்போது தியாகம் செய்து சிறை சென்ற முக்கிய தேச
பக்தர்கள் அநேகமாய் இந்தக் காங்கிரஸிற்குப் போகவே இல்லை. முந்திய வருஷங் களில், ஏழை மக்களும் விவசாயிகளும், தொழிலாளருமான தேச
பக்தர்களே முக்கியப் பிரதிநிதிகளாய் இருந்தார்கள். இவ்வருஷமோ ஒத்துழையாமை உச்சத்தில் இருக்கும் போது காங்கிரசைத் திரும்பிக்கூட பார்க்காதவர்களும், பெரும்பாலும் ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார்
போன்றவர்களும், பிராமணர்களுமே தமிழ்நாட்டின் சார்பாக முக்கியப்
பிரதிநிதிகளாயிருந்திருக்கிறார்கள், ஏறக்குறைய ஒவ்வொரு மாகாணத்
திலிருந்தும் இதுபோலவே பொது ஜனங்களை ஏமாற்றி சட்டசபைப் பதவி பெறவும், உத்தியோகம் பெறவும், தங்கள் வகுப்பு ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஆசைப்பட்டவர்கள்தான் போயிருக்கிறார்கள் என்பதில்
சந்தேகமில்லை.
காங்கிரசின் பிரதிநிதித்துவம் இப்படி இருக்க, நிறைவேறின தீர்மானங்களைப் பற்றியோவென்றால், எந்தெந்த சர்க்கார் உத்தியோகத்தை ஒப்புக்
கொள்ளுவது, எந்தெந்த சர்க்கார் உத்தியோகத்தை தள்ளிவிடுவது; எப்படிப்பட்ட தீர்மானத்தைச் செய்தால் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெறலாம்
என்கிற விஷயங்களே காங்கிரஸின் முக்கிய நேரங்களைக் கவர்ந்துக்
கொண்டது. அவரவர்கள் மாகாணத்தில் உள்ள அவரவர்களுக்குரிய
சௌகரியத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டே சண்டைகள் பிடிக்கப்பட்டன. தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சியாருக்கு, தமிழ்நாட்டில் உத்தியோகம்
கிடைப்பதற்கு வழி இல்லாததால், தமிழ்நாட்டுத் தலைவர் “சீ! இந்தப் பழம் புளிக்கும்” என்பது போல் உத்தியோகமே பெறக்கூடாது என்று வாதாடினார்கள். ஆனாலும் இந்தியா சட்டசபையில், தங்களுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருப்பதின் நிமித்தம், சில உத்தியோகம் பெற சௌகரியம் இருப்பதால் அங்குள்ளவைகளை மாத்திரம் பெற்றுக் கொள்வதில் ஆக்ஷேபனை இல்லை என்கின்றனர். இதுபோலவே மத்திய மாகாணத்திலும் சுயராஜ்யக் கட்சியாருக்குச் சில உத்தியோகங்கள் கிடைப்பதற்கு சௌகரியம் இருப்பதால் அவர்கள்
அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்றனர். இவ்விரண்டு கட்சியின் விவாதமே காங்கிரசின் நடவடிக்கையாய்ப் போய்விட்டது. பழைய வழக்கம் போல் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் ஆதிக்கமே காங்கிரஸில் இருந்ததால்
தமிழ்நாட்டு நிலைமையை அநுசரித்தே (தமிழ் நாட்டிலும் உத்தியோகம் சம்பாதிக்கக்கூடிய நிலைமை வருகிறவரையில், இந்தியா சட்டசபை உத்தியோ
கங்கள் நீங்கலாக) சில உத்தியோகங்கள் பெற்றுக் கொள்ளக்கூடாது என்கிற
தீர்மானம் நிறைவேறிற்று.

அதோடு பாமர ஓட்டர்களை ஏமாற்றத்தக்கதென்று சொல்லும்படியாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது அதாவது, தங்கள் கோரிக்கைகளை
சர்க்கார் ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி மாதத்தில் கவுன்சில் பதவியை ராஜிநாமாச் செய்து விடுவதென்பது, இது தேசத்தாரை ஏமாற்றுவதற்கென்றே
செய்த தீர்மானம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் மார்ச்சு மாதத்தில் தானாகவே சட்டசபைகள் கலையப் போகிறது. அப்படியிருக்க மார்ச் அல்லது
ஏப்ரல் மாதம் கலையப் போகும் சட்டசபை ஸ்தானத்தை பிப்ரவரி மாதம் 28-ந் தேதி ராஜிநாமாச் செய்வதில் சர்க்காரார் பயந்துவிடுவார்களா? அல்லா
மலும் சுயராஜ்யக் கட்சியார் கோரிக்கையை இதற்கு முன் பல தடவைகளில் நிறை வேற்றினதை சர்க்காரார் ஏற்றுக்கொள்ளாமல் குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டார்களே; அப்போது ஏன் ராஜிநாமா செய்திருக்க கூடாது.
பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல், இவைகளை
யெல்லாம் பொது ஜனங்கள் அறிய மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு
எவ்வளவோ தந்திரமாகக் காங்கிரசை நடத்தி விட்டார்கள்

‌‌ 33 கோடி ஜனங்களின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும் உழைப்பதாகச் சொல்லப்படும், இந்திய தேசிய மகாநாடே சூது மகாநாடாய்ப் போய்விடுமானால், குட்டி மகாநாடுகளின் யோக்கியதையைப்
பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
காங்கிரஸ் தீர்மானத்தைப் பற்றி கல்கத்தா ‘சர்வெண்டு’ பத்திரிகை
எழுதுவதாவது:-

“காங்கிரசில் நிறைவேறின பண்டித நேருவின் தீர்மானமானது மிகவும் சாதுர்யமாக (ஜனங்கள் இரண்டு விதமாக எண்ணும்படி) இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியாரிடம் சரணாகதி அடைந்து விட்டது என்னும்
அபிப்ராயங்கொண்ட தத்துவத்தை வெளிப்படையாகச் சொல்லுவதற்குப்
பதிலாக, காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சித் திட்டத்தை எடுத்துக் கொண்டு அதை நடத்த வேண்டும் என்கிற வார்த்தைகளைக் கொண்டு தந்திரமாய் தீர்மானம்
அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஜனங்களின் ஓட்டுப் பெறுவதற்காகவே பாமர ஜனங்களை ஏமாற்றத் தக்க வண்ணம் சர்க்காரைக் கடைசி முறையாக சில திருத்தங்கள் கேட்பது
அது கிடைக்காவிட்டால் வெளியே வந்து விடுவதென்றும், சட்டமறுப்பு
செய்யப்படும் என்று சர்க்காரை மிரட்டுவதுமானதும் சட்டசபைக்கு வெளியில் நிர்மாணத்திட்டம் நடத்துவது என்கிற பேச்சளவில் நிறைவேற்றக் கூடிய
திட்டமும் அத்தீர்மானத்தில் கண்டிருப்பதானது ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு மிகவும் அநுகூலமானதுதான்.” இதிலிருந்து இவ்வருட தேசியக் காங்கிரஸின்
போக்கை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.