பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு
ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிக்கைகள் என்று சொல்லுவார்கள். ஆனால் அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி. ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது. நமது நாட்டைப்
பொறுத்தவரையில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமை உடையவர்களாயும், இத் தேசத்தையே ஆண்டவர்களாயும் பராக்கிரமசாலிகளாகவும் இருந்து வந்திருந்த போதிலும் இன்றைய தினம்‌ “பிற்பட்டவர்”களாகவும், “சூத்திரர்” களாகவும் இருப்பது ஏன்?
இதற்குப் பொறுப்பாளி யார் என்று பார்த்தால் அது நமது நாட்டுப் பத்திரிகைகளேயாகும்.

தற்காலம் நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று பெரும்பாலோர்
கையிலும் ஊசலாடுவது பிராமணப் பத்திரிகைகளே அல்லவா? அப்பத்
திரிகைகளுக்கு அவ்வவ்விடங்களின் சமாச்சாரங்களை எழுதியனுப்பும்
நிரூபர்களும் பிராமணர்களே அல்லவா? அப்பத்திரிகைகளுக்கு ஏஜெண்டுகளாயிருந்து விற்றுக் கொடுப்பவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே அல்லவா? அப்படி இருந்தும் அதற்குப் பணம் கொடுத்து வாங்கி படித்து கெட்டுப் போகிறவர்கள் பிராமணரல்லாதார்களாகவே மாத்திரம் இருக்கிறார்கள். பிராமணப் பத்திரிகைகள் இதுசமயம் நமது நாட்டில் ஒவ்வொரு
பட்டிணங்களிலும், கிராமங்களிலும் பிரவேசித்திருக்கின்றது. அங்குள்ள
படிக்கத் தகுந்த ஒவ்வொருவரும் அப்பத்திரிகைகளைப் படிப்பதும்,
அவற்றை உண்மை என்று நம்புவதும், மற்றவர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லு
வதுமான வழிகளில் பிராமணப் பத்திரிகைகளின் அபிப்ராயத்தை தேசமெல்லாம் பரப்பச் செய்துவிடுகின்றன.சாதாரணமாய் நமது கிராமங்களிலுள்ள பாமர ஜனங்களும் “சுதேசமித்திரன்” என்னும் பிராமணப்
பத்திரிகையின் அபிப்பிராயத்தை தான் உண்மையான ராஜீய அபிப்ராயமென்றும், அது யார் யாரைத் தலைவர் என்று சொல்லுகிறதோ அவர்களைத்

தலைவர்கள் என்றும், அது யார் யாரைத் தேசத் துரோகியென்று சொல்லுகிறதோ அவர்களைத் தேசத்துரோகி என்றும், அது சொல்லுகிறபடியெல்லாம்
நடப்பதும், நினைப்பதும் தான் தேச கைங்கரியமென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே மற்றும் “சுயராஜ்யா” என்னும் ஒரு தமிழ் தினசரிப் பத்திரிகையும் பிராமணர்களால் நடத்தப்பட்டாலும் பிராமணரல்லாதாரை
ஏமாற்றுவதற்காக வேண்டி அதன் உண்மைப் பத்திராதி பர்கள்
பெயரை மறைத்து பிராமணரல்லாதார் பெயரைப் போட்டு ஏமாற்றி வருகிறார்கள்.
உண்மையில் அதன் ஆசிரியர்கள் ஒரு ஐயங்கார் பிராமணரும் ஒரு விபூதிப் பிராமணருமாயிருக்க அது வெளியில் தெரிந்தால் அப்பத்திரிகையைப் பத்திரிகை யென்று பாமர ஜனங்கள் நினைத்து விடுவார்கள் என்று வேண்டுமென்றே மறைத்துவிட்டு, ஒத்துழையாமையில் ஈடுபட்டுத் தங்கள்
உத்தியோகங்களை விட்டு கஷ்டப்பட்டதால் செல்வாக்கு ஏறபட்டிருக்கும் ஸ்ரீமான்கள் கிருபாநிதி, திரிகூட சுந்தரம்பிள்ளை ஆகிய இருவர் பெயர்களைக் காட்டித் தங்கள் நன்மைக்கான அபிப்ராயங்களை ஷையார்கள்
அபிப்ராயமென்று நினைக்கும்படி ஜனங்களுக்குள் புகுத்தி வருகிறார்கள். இந்த பிராமணரல்லாத கனவான்களும் கொஞ்சமும் கவலையில்லாமல்
இவவித செய்கைக்குத் தங்கள் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் இப்பத்திரிகைகளுக்கு மூலதனம் ஏறக்குறைய முக்கால் பாகம் பிராமணரல்லாதார்களுடையதே. அதை வாங்கி வாசித்து அவர்களுக்கு லாபம் கொடுக்கிறவர்களும் பிராமணரல்லாதார்களே. ‌றலஜல இவ்வளவு
இருந்தாலும் இப்பத்திரிகைகளைக் கண்டால் பிராமணரல்லாத தலைவர்கள் என்போர்களிலும், பத்திராதிபர்கள் என்போர்களிலும் பெரும்பாலோர் பூனையைக் கண்ட எலி போல் நடுங்குகிறார்கள். தங்கள் ஜாதகத்தையே அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அந்த பிராமணப் பத்திரிகைகளையே தங்களுக்கு பலன் எழுதும்படி பல்லைக் கெஞ்சிக் கொண்டு திரிகிறார்கள். மகாத்மா போன்றவர்களே இப்பிராமணப் பத்திரிகைகளைக் கண்டால் சில
சமயங்களில் பயப்பட்டு சமயோசிதமாய் நடக்க வேண்டியிருக்கிற தென்றால் ஐயோ!பாவம் மற்ற ஆகாசக் கோட்டைகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அப்புறம் குட்டித் தலைவர்கள், தொண்டர்கள் என்போர்களைப் பற்றிக்
கேட்கவும் வேண்டுமா?
இம்மாதிரி ஒரு பெரிய சமூகத்தையே அதன் தலைவர்கள் என்போரையே இப்பத்திரிகைகள் அடக்கி ஆண்டுக்கொண்டு, தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொண்டு வருவதை எத்தனை நாள்களுக்குத்தான்
சகித்துக் கொண்டு வருவதென நினைத்து சரியான மனிதர்கள் என்போர் யாராவது
துணிந்து இதன் தந்திரத்தை வெளிப்படுத்தக் கொஞ்சம் பிரயத்தனப்பட்டால்
அவர்களை அடியோடு ஒழிக்க பிராமணப் பத்திரிகைகளும்,
பிராமணத் தலைவர்களும், பிராமண அதிகாரிகளும் எல்லாரும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அந்த சமயங்களில் அய்யர் – அய்யங்கார்

ஆச்சாரியார் – ராவு என்கிற பேதமே இல்லாமலும் மிதவாதி – சுயராஜ்யம் கட்சி – ஒத்துழையாமைக் கட்சி – காந்தி சிஷ்யர் கட்சி – சர்க்கார் உத்தியோகஸ்தர் என்கிற வித்தியாசமே இல்லாமலும் ஒரே கட்டுப்பாடு – கம்பியில்லாத தந்திபோல் ஒரே அபிப்ராயம், ஆளுக்கொரு வேலை; அதாவது பத்திரிகைகளில் வைவதொருவர்; பிரசங்கம் மூலம் வைவதொருவர்; பணம் கொடுத்து வையம் சொல்லுவது ஒருவர்; காந்தியிடம் சாடி சொல்லுவது ஒருவர்; அதிகாரத்தைக் கொண்டு நசுக்குபவர் ஒருவர்; ஆக ஒவ்வொருவரும் தங்களாலானதை உடனே செய்யப் புறப்படுவதன் மூலம் எப்பேர்ப்பட்டவனையும் நடுங்கச் செய்து விடுகிறார்கள். உதாரணமாக, ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் நிலைமையைப் பார்த்தாலே இதன் உண்மை பொது ஜனங்களுக்கு நன்றாக விளங்கும். சென்ற
வருஷமெல்லாம் சுயராஜ்யக் கட்சியைக் வைது கொண்டிருந்தவரும், கொஞ்ச
நாளைக்கு முன்பெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டு இருந்தவரும், செல்வச் செருக்கும் செல்வாக்குப் பெருகும் நிலைக்காது
என்று ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு சாபம் கொடுத்தவரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற காங்கிரஸ்தான் தகுந்த இடம் என்று காஞ்சி அக்ராசனப் பிரசாரத்தில் சொன்னவரும், ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானபோது, ஸ்ரீமான்கள் வ.வெ.சு. அய்யர், சீனிவாசய்யங்கார் சிஷ்யர்கள் முதலியவர்கள் ஸ்ரீமான் நாயக்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் “ஒரு பிராமணரால்லாதாரான ஸ்ரீமான் ஈவெ. இராமசாமி நாயக்கர் அக்ராசனம் வகிப்பதைப்
பொறுக்க மாட்டாமல் பிராமணர்கள் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
கொண்டு வந்திருக்கிறார்கள்; சட்டசபையில் செய்வது போலவே இங்கும் செய்கிறீர்களா” வென்று கேட்ட வருமான நமது முதலியார், இப்போது தன்னை மாரீசன் என்று சொன்னவரும், காந்தியடிகளுக்குப் புத்தியில்லை என்று சொன்னவரும், ஒத்துழையாமை சட்ட விரோதமென்று சொன்ன வருமான
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பின்னால் திரிந்து கொண்டும். அந்த
சீனிவாசய்யங்காரையே தமிழ்நாட்டுக்குத் தலைவராக்கப் பாடு பட்டுக் கொண்டும், சுயராஜ்யக் கட்சி யோக்கியமான கட்சி என்றும், அதனிடமும் அதன் தலைவரிடமும் ஒத்துழையாமை வாசனை அடிக்கின்ற தென்றும், சட்ட
மறுப்பு அக்கட்சியில் தொக்கியிருக்கின்றதென்றும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்றும், முன் தான் வகுப்புவாரிப் பிரதிதிதித்துவம்
கேட்டது கூட ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கென்றும், காங்கிரஸில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்கக் கூடாது என்றும், சுயராஜ்யக் கட்சிக்கே வோட்டுக் கொடுங்களென்றும் சொல்லுவதானால், அதன் சத்தி எவ்வளவென்பது ஒருவர் சொல்லாமலே விளங்கும். இவ்வளவு பயமும், மாறுதலும்
இப்பேர்ப்பட்டவர்களுக்கெல்லாம் வரக் காரணமென்ன? பாமர ஜனங்கள் பிராமணப் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதும், பிராமணத் தலைவர்களை
கொண்டாடுவதும் அவர்கள் சூழ்ச்சிகளை அறியாமலிருப்பதும், அவர்கள் கையிலிருக்கும் அதிகாரங்களுக்குப் பயப்படுவதுமே அல்லாமல் வேறு என்ன? ஆதலால் ஆங்காங்குள்ள பிராமணரல்லாத பிரமுகர்கள் தங்கள் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்றிருந்தால், தங்கள் சமூகம் ஏமாறியவர்கள் ஆகாமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால்,
ஓவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடிசையிலும் “திராவிடன்” “குடி அரசு”
முதலியவைகள் போன்ற உண்மை உரைக்கும் பத்திரிகைகளைச்
செலுத்த வேண்டும். உண்மை உரைப்பதன் மூலம் அதன் ஆசிரியர்கள் பிராமண
அதிகாரத்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும்
தயாராய்த்தான் இருப்பார்கள். ஆதலால் வஞ்சகப் பத்திரிகைகளைப் பார்த்து மோசம் போகாமலிருக்கச் செய்யவேண்டும்.

இந்தக் காரியங்களை நீங்கள் செய்யாமலிருந்தால் வரப்போகும்
சட்டசபை எலெக்க்ஷனில் பிராமணரல்லாதார் கண்டிப்பாய் தோற்கடிக்கப்பட்டு போவார்கள். ஸ்ரீமான்கள் டி எம்.நாயரும், ஸர்.பி.டி.செட்டியாரும்
எவ்வளவோ அரும்பாடுபட்டு பிடித்துக் கொடுத்த கோட்டையை மறுபடியும் பிராமணர்கள் சுவாதீனப்படுத்திக் கொண்டு உங்களை வெளியாக்கிவிடப்
போகிறார்கள். அப்புறம் 10 வருடமோ, 100 வருடமோ கடவுளுக்குத்தான்
தெரியும. வீணாய்ச் சர்க்காரை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை.
சாக்கார் எந்தக் கை வலுக்குமோ அந்தக் கையில் சேர்ந்து விடுவார்கள். இப்பொழுதே சர்க்காருக்குப் பிராமணர்களிடத்தில் பயம் வந்து விட்டது. அவர்கள்தான் அடுத்த சட்ட சபையில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களை இப்பொழுது இருந்தே தடவிக்கொடுத்துக்
கொண்டு வருகிறார்கள். பிராமணரல்லாதாரே எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!