அடுத்துவரும் சட்டசபைத் தேர்தல்களில் பிராமணரல்லாதார்‌ முன்னேற்றத்தில் கவலையுள்ள எந்த பிராமணரல்லாதாரும் ஜெயம்
பெற முடியாதபடி விஷமப் பிரசாரங்கள் செய்து பிராமணர்களும் அவர்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடும்படியான பிராமணரல்லாதார்களையுமே சட்டபையைக் கைப்பற்றும்படியான மாதிரிக்கு வேலைகள் செய்யப்பட்டு வருகிறதைப் பிராமணரல்லாத பாமர ஜனங்கள் இன்னமும் அறியாமல் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அநுகூலமாகவே சில பிராமணரல்லாத பத்திரிகைகளும், தலைவர்கள் என்போர்களும், தொண்டர்கள் என்போர்களும் ஒத்துப் பாடிக்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இப்
பத்திரிகைகளும், தலைவர்களும், தொண்டர்களும் தற்காலம் செல்வாக்கும், பெருமையும், ஜீவனோபாய மார்க்கம் அடைந்து இருந்தபோதிலும், தேர்தல்கள் முடிந்து பிராமணர்கள் காரியம் முடிந்தவுடனே காதறுந்த ஊசிபோல கருதப்படுவார்கள் என்பதில் யாதொரு சந்தேகமும் இருக்காது. ஆனாலும், இப்பொழுது ஏன் பிராமணர்களும் அவர்கள் பத்திரிகைகளும் அதிகமாக
பிரயத்தனங்கள் எடுத்துக்கொண்டு இவ்வளவு பெண்கள் செலவு செய்து பிரசாரங்கள் செய்கிறார்கள் என்கிற விஷயத்தில் சிலருக்கு அதன் அவசியம் விளங்காமலேயிருக்கிறது. இப்பிரசாரங்களின் முக்கியக் காரணம் அடுத்தாற் போல் ஏதோ சில ராஜீய சீர்திருத்தங்கள் என்பது ஏற்படப் போகிறது என்பதாக
பிராமணங்கள் கவலையாயிருக்கிறது. அச்சீர்திருத்தங்களுக்காக 1920 -ம் வருடத்திய சீர்திருத்தங்கள் வழங்க வேண்டிய அரசாங்கத்தார் ஒரு விசாரணைக் கமிட்டி ஏற்படுத்தியது போல், இப்பொழுதும் ஒரு விசாரணைக்கமிட்டி ஏற்படுத்துவார்கள். அக்கமிட்டி ஏறக்குறைய 1927 லோ அல்லது 1928
– ம் வருடத்திலோ அமலுக்கு வந்து ஆங்காங்கு சென்று விசாரணைகள்செய்யத் தொடங்கும். அவ் விசாரணையில் பிராமணரல்லாதார் தங்கள் நிலைமையையும் தேவைகளையும் உள்ளபடி ஒற்றுமையாய்ச் சொல்லிவிட்டால் அது பிராமணர்களுக்கு பெரிய ஆபத்தாய் முடிந்துவிடும் என்கிற பயம் வைத்து 1920 – ம் வருஷத்திய சீர்திருத்த விசாரணையின் போது ஜஸ்டிஸ் கக்ஷிக்கு விரோதமாய் சென்னை மாகாண சங்கம் என்று ஒன்றை ஸ்தாபித்து அதற்குப் பத்திரிகைகளையும் ஸ்தாபித்து பிரசாரங்களுக்கு ஆள்களை
ஏற்படுத்தி அதற்கு பணங்கள் உதவ சூழ்ச்சிகள் செய்து, ஜஸ்டிஸ் கக்ஷியின் அபிப்ராயம் நிறைவேற்றவொட்டாமல் செய்தது போல், இப்பொழுதும் பிராமணரல்லாதாரில் சிலரையும் சில பத்திரிகைகளையும் சுவாதீனம் செய்து பிராமணரல்லாதாரின் தேவைக்கு விரோதமாய்ப் பிரசாரம் செய்விக்க வேண்டியது தங்கள் அவசிய மாய் போய்விட்டது.

ஆனால் 1920-ம் வருஷத்திய சீர்திருத்தத்தில் பிராமணரல்லாதாரை ஏமாற்றி சரி செய்து கொள்ள ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யர் செலவுக்குப்பணம் முதலியவைகளும், பிரசார ஏற்பாடு கிரமம் முதலியவைகளும் செய்யும் வேலையை ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது 1930-ம் வருடத்திய சீர்திருத்தத்திற்கு பிராமணரல்லாதார் வஞ்சிக்க செலவுக்குப் பணமும்
பிரசார ஏற்பாடும் ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பிராமணரல்லாதார்களில் அப்பொழுது யார் யாரை தங்கள் வசப்படுத்திக் கொண்டார்களோ, அதுபோலவே இப்பொழுதும் ஏறக்குறைய அதே ஆள்களே அவர்கள் வசப்பட்டிருக்கின்றனர். அவைகளின் இரகசியத்தையும் சிலர் கோப மயக்கத்தில் வெளியிட்டிருப்பதையும் கூட கவனித்திருக்கலாம். அதாவது, ஜஸ்டிஸ் கக்ஷியை ஒடுக்க (பாமர ஜனங்களை ஏமாற்றி)த் தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கப்பட்டது என்று சொல்லியிருப்பதைக் கவனித்தால் நன்றாய் விளங்கும் சென்ற “சீர்திருத்த” விசாரணையின் போதே சென்னை மாகாணச் சங்கம் என்னும் ஒரு துரோகச் சங்கம் தோன்றியிருந்திராதிருக்குமாயின் பிராமணரல்லாதார் தங்கள் சமூக நன்மைக்காக எதிர்பார்த்த நன்மைகள் ஏறக்குறைய அடைந்தே இருக்கக்கூடும். இப்பொழு
தாவது அதை அடைய மார்க்கமில்லாமல் பிராமணரல்லாத மக்களையே சுவாதீனப் படுத்திக் கொண்டு கொடுமை செய்வதோடு தங்கள் பத்திரிகைகளிலும் இதையே முக்கிய கொள்கையாக வைத்துப் பாடுபடுகின்றன.இவற்றை பிராமணரல்லாத பாமர ஜனங்கள் நம்பி மோசம் போகிறார்கள்

அதாவது, நாம்வெளியிடங்களுக்கு பல காரியமாய்ச் சென்ற சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்த சில பிராமணரல்லாத சகோதரர்கள் நம்மிடம் வந்து மிகுந்த பரிதாபப்படுவதை நேரில் பார்த்தோம். எப்படியெனில், நம்மைப்பார்த்து, “ஐயா, தங்களைத்தானே தானே தமிழ்நாடு உண்மையான தேசபக்தர் என்று எண்ணியிருந்தோம். தாங்களே இப்பொழுது ஜஸ்டிஸ் கக்ஷியில்சேர்ந்து விட்டீர்களே. எங்களை இப்படிக் கைவிட்டு விடலாமா? தாங்களே இப்படிச் செய்தால் போலி தேசபக்தர்களைப்பற்றி சொல்லவும் வேண்டுமா? இனி நாங்கள் யாரை நம்புவது” என்று கவலைப்பட்டார்கள்.

நான் ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்ததாய் தாங்கள் எப்படி தெரிந்தீர்கள் என்று கேட்டால் “சுயராஜ்யா” “சுதேசமித்திரன்” பத்திரிகைகளின் மூலமாய் அறிந்தோம் என்று சொல்லுகிறார்கள். சரி, நான் ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்தேனா இல்லையா என்பதைப் பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம். ஜஸ்டிஸ் கக்ஷி என்றால் என்ன அவ்வளவு பாவமான கக்ஷியாய்ப் போய் விட்டது என்று கேட்டால்,

1. அக்கட்சிக்குக் கதரில் நம்பிக்கையில்லை.

2. உத்தியோக ஆசை.

‌ 3. ஜெயிலுக்குப் போன தேசபக்தர்களுக்கு செளகரியம் செய்யக் கூடாது என்று அதன் தலைவர் ஸர்.செட்டியார் சொன்னார்.

4. தஞ்சாவூர் ஜில்லா விவசாயிகளுக்கு நிலத்தீர்வை உயர் த்தக்கக்கூடாது என்று சட்டசபையில் வாதாடியபோது ஜஸ்டிஸ் கக்ஷியார் அதை ஆதரிக்காமல் எதிரிடையாய் வோட்டுக் கொடுத்தார்கள்.

ஆகிய இக்காரியங்களை நாங்கள் மிகவும் முக்கியமானதாய்க்
கருதுகிறோம். ஆதலால், இம்மாதிரிக் கக்ஷியை தாங்கள் ஆதரிக்கலாமா என்று கேட்கிறார்கள். இது போலத்தான் மற்றும் பாமர ஜனங்கள் நினைத்திருப்பார்கள் என்பதும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் பணம் வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்யும் பிராமணரல்லாத தொண்டர்களும் இதைத்தான்
சொல்லிப் பிரசாரம் செய்துவருகிறார்கள் என்பதும் நமக்கு இதிலிருந்து நன்றாய் விளங்கிற்று.

1- வது, ஜஸ்டிஸ் கக்ஷிக்குக் கதரில் நம்பிக்கையில்லை என்பது ஒரு முக்கியமான குறைவுதான். தற்காலம் இந்தியாவிலுள்ள எந்த கக்ஷிக்கு கதிரில் நம்பிக்கையிருக்கிறது? மிதவாதக் கக்ஷிக்கு நம்பிக்கையிருக்கிறதா?
சுயேச்சைக் கக்ஷிக்கு நம்பிக்கையிருக்கிறதா? பெசண்ட் கக்ஷிக்கு நம்பிக்கையிருக்கிறதா? அல்லது காங்கிரஸ் கக்ஷிக்காவது நம்பிக்கையிருக்கிறதா? நூற்போர் சங்கத்தில் இந்தியா ஓட்டுக்குமாக அங்கத்தினராயிருக்கிற சுமார்
3000 பேரைத் தவிர மற்ற ராஜீயவாதிகளுக்குக் கதரில் நம்பிக்கையில்லை என்றே சொல்ல வேண்டும்

நம்பிக்கை இருந்திருக்கு மேயானால், அவரவர்கள் ராஜிய திட்டத்தில் கதர் முதன்மையான ஸ்தானம் பெற்றிருக்கும். அல்லாமலும் சுயராஜ்யக் கக்ஷிக்குக் கதரில் நம்பிக்கையில்லாத காரணத்தாலேதான் காங்கிரஸை விட்டு கதரை வெளியேற்ற வேண்டியதாயிற்று என்பதில் சந்தேகமுண்டா? அப்படிக்
கிருக்க சுயராஜ்யக் கக்ஷியை ஆதரிப்பவர்களைப்பற்றி கவலை கொள்ளாமல் ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றி மாத்திரம் ஏன் இவ்வளவு ஆத்திரப்பட வேண்டும்?

2- வது உத்தியோக ஆசை என்பது. உத்தியோக ஆசை நமது
நாட்டில் எந்தக் கக்ஷிக்கு இல்லை? மேல்கண்ட பல கக்ஷிகள் உத்தியோகம் வகிக்கிறதா? இல்லையா? சுயராஜ்யக் கக்ஷியாரும் உத்தியோகம் வகிக்கிறார்களா? இல்லையா? அவர்களும் சர்க்காரின் 4000, 5000 சம்பளம் வாங்கி வருகிறார்களா? இல்லையா? இதைப்பற்றி அவர்களுக்கு சாதகமான பத்திரிக்கைகளாகிய “நவசக்தி” “தமிழ்நாடு” ஆகிய பத்திரிகைகளே ஸ்ரீமான்கள் பட்டேல் நேரு, ரெங்கசாமி ஐயங்கார் முதலியோர்கள் பார்க்கும் வேலைக்கும் தம்பே முதலியவர்கள் பார்க்கும் வேலைக்கு வித்தியாசமில்லை என்று எழுதியதைக் கவனித்தால் விளங்காதா? சில மாகாணங்களில் முக்கியமாய்த் தமிழ்நாட்டில் சுயராஜ்யக் கக்ஷியாருக்கு உத்தியோகம் கிடைப்பது கஷ்டமா
யிருக்கிறபடியால் சீ .. அந்தப் பழம் புளிக்கும் என்று ஏமாற்றி வோட்டு வாங்கப் பார்க்கிறார்கள். கிடைக்கும் போலிருந்தால் உடனே பெற்றுக்கொள்ளுவார்கள். காங்கிரஸ் செக்ரட்டேரியான ஸ்ரீமான் A.ரெங்கசாமி ஐயங்காரும், சுயராஜ்யக் கக்ஷி செக்ரட்டேரியான ஸ்ரீமான் T.ஆதிநாராயண செட்டியாரும் தம் மக்களுக்கு நூற்றுக்கணக்கான சம்பளம் பெறத்தக்க உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்களா? இல்லையா? அன்றியும்
தங்கள் திட்டத்திலாவது உத்தியோகம் கூடாது என்று ஏற்படுத்திக் கொண்டிரு க்கிறார்களா? அது சமயம் போல் பார்த்துக் கொள்ளலாம் என்று தானே எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

3-வது ஜெயிலுக்கு போனவர்களுக்குச் சவுகரியம் செய்யக்கூடாதுஎன்று ஸர்.செட்டியார் சொன்னது‌.

இந்த வார்த்தைதான் சிலருக்குப் பெரிய ஆதாரமாயிருக்கிறது. இதை
வைத்துக் கொண்டுதான் ஸ்ரீமான் பாஷ்யம் ஐயங்காரும், ஸ்ரீமான்
சத்தியமூர்த்தியும், அவர்கள் நண்பர் ஜனாப் ஷாபி மகமதும் தியாகராய செட்டியார் தமிழ்நாட்டு “டயர்” என்று சொன்னார்கள். இன்னமும் அதையே சில வயிற்றுச்சோற்று தேசபக்தர்களும் சொல்லிக் கொண்டு பிராமணர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்கிறார்கள்.

ஸர். செட்டியார் சொன்னதை உண்மையென்றே வைத்துக் கொள்ளுவோம். ஏன் அப்படிச் சொன்னார்? எதற்காக அப்படிச் சொன்னார்? என்பதைக் கவனிக்க வேண்டாமா? அவருக்கு ஜெயிலுக்குப் போய் அவஸ்தைப்பட்ட ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, எஸ். ராமநாதன், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர் மைத்துனனாகிய தேவ நாயக்கர் முதயானவர்களிடம்
ஸர்.செட்டியாருக்கு விரோதமோ, குரோதமோ சுயராஜ்யம் வந்து விடுமோ? என்னமோ என்கிற பயமா? இப்படிச் சொல்லித்தான் ஏதாவது பணமோ உத்தியோகமோ சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிற சுயநலமா? என்பதைக் கவனிக்க வேண்டாமா?

முதலாவது ஸர்.செட்டியார் ஒத்துழையாமைத் தத்துவம் ஒழுங்காய் நடைபெறும் என்கிற நம்பிக்கையில்லாதவர். ஒத்துழையாமைத் தத்துவத்தில் பிராமனரல்லாதார் ஈடுபட்டு உழைப்பதில் அதன் பயனை பிராமணர்கள் அடைவார்கள் என்கிற தீர்க்கதரிசனமுள்ளவர். அல்லாமலும் ஒத்துழையாமையின் பேரால் பிராமணரல்லாதாரில் சில பொறுக்கு மணிகள் தங்கள்
முன்னேற்றத்தை கெடுத்துக் கொள்கிறார்களே என்கிற விசனமுடையவர். இவ்வித குணமுள்ள ஒருவர் மக்கள் ஜெயிலுக்குப் போவதை எப்படி ஆதரிக்கக்கூடும்? அதோடு, அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து
வெடுக்க எப்படி மனம் வரும்? ஜெயிலுக்குப் போகிறவர்களுக்கு சவுகரியம் செய்து கொடுப்பதாயிருந்தால், வெளியில் கஞ்சிக்கில்லாமல் திரிகிற ஏழை மக்கள் எல்லோரும் தான் ஜெயிலுக்குப் போய் விடுவார்கள், அல்லாமலும் ஜெயிலுக்குப் போவது தப்பு என்று நினைக்கிறவர் இன்னும் அநேகம் பேருக்கு ஜெயில் ஆசை உண்டகும்படியாக சவுகரியங்கள் செய்து கொடுக்க எப்படி சம்மதிப்பார்? இதை யோசிக்க வேண்டாமா? இது ஒருபுறம் இருந்தாலும், சுயராஜ்யக் கக்ஷித் தலைவரான காலஞ்சென்ற தேசபந்து தாஸை ஒரு‌ சமயத்தில் பார்த்து “ஜெயிலுக்குப் போயிருக்கும் தேசபக்தர்களைக் கவனிக்காமல் சட்ட சபைக்குப் போக ஆசைப்படுவதின் மூலம் சர்க்காருக்கு உதவி
செய்கிறீர்களே” என்று கேட்டதற்கு “ஜெயிலுக்கு போனவர்களைப் பற்றிக் கவலையில்லை. வெளியில் வயிறு வளர்க்க யோக்கியதை இல்லாத கஞ்சிக்கு வகையற்றவர்களே தான் போயிருக்கிறார்கள்” என்று சொன்னார். அது மாத்திரம் குற்றமில்லையா? அப்பேர்ப்பட்டவர்களின் பெயரைச்
களின் பெயரைச் சொல்லிக்கொண்டுகூட நம் நாட்டுப் பிராமணர்கள் பிழைக்கவில்லையா? ஸர் – செட்டியார் சொன்னது மோசமானதா? தேசபந்து தாஸ் சொன்னது மோசமானதா?
இதைப்பற்றி யோசிக்க வேண்டாமா?

அன்றியும் தமிழ்நாட்டுத் தலைவர் அநேக தேசபக்தர்களுக்கு தன்வகுப்பு நலத்திற்காக கஞ்சி வார்க்கும் தர்மப் பிரபு ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் வாயாலேயே, ஒரு ஒப்பற்றத் தலைவர் என்று சொல்லப்படும் பெரியாரான ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் ஒத்துழையாமை அன்கான்ஸ்ட்
டிடியூஷனல் – சட்ட விரோதமானது. ஆதலால் காங்கிரஸ் ஸ்தாபனங்களையெல்லாம் சட்ட விரோதமான கூட்டமாகத் தீர்மானித்து, காங்கிரஸ் மெம்பர்களையெல்லாம் மகாத்மா உள்பட ஜெயிலில் அடைத்து‌ ஒத்துழையாமையையே ஒழித்துவிட வேண்டுமென்று சொன்னாரே இது குற்றமில்லையா? இவரை இன்றையத் தினம் தமிழ்நாட்டுத் தலைவராகக் கொள்ளவில்லையா? இவர் சொன்னது மோசமானதா? ஸர்.செட்டியார் சொன்னது மோசமானதா? அப்பேர்ப்பட்ட ஸர்.செட்டியாரை ஸ்ரீமான் ஐயங்கார் தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டதை விட ஸர்.செட்டியார் சொன்னது மோசமானதா?

4-வது, தஞ்சை ஜில்லா நிலத் தீர்வையைக் குறைப்பதற்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் விரோதமாயிருந்ததாகச் சொல்வது.

இதைப் பாமர ஜனங்கள் சரியானபடி உணருவதற்கே மார்க்கமில்லாமல் விஷமப் பிரச்சாரம் நடப்பதால் ஏமாந்து போக நேரிடுகிறதேயன்றி, இதில் ஜஸ்டிஸ் கக்ஷிடயார் குற்றமென்ன என்பதே விளங்கவில்லை. முதலாவது தஞ்சை நிலத்தீர்வை விஷயம் கக்ஷியைச் சேர்ந்ததே அல்ல.‌ ஜஸ்டிஸ் கக்ஷி‌மெம்பர்கள் சில பேர் வரி உயர்த்தக் கூடாது என்பதற்கே ஒட்டுக்கொடுத்தார்கள், ஜஸ்டிஸ் கக்ஷி அல்லாத மெம்பர்கள் பல பேர் வரி உயர்த்த வேண்டும் என்பதற்கே ஓட்டுக் கொடுத்தார்கள்.

ஏனெனில், வரி உயர்த்னது தஞ்சை ஜில்லாவுக்கு மாத்திரம் அல்ல. 30 வருடத்திற்கு ஒரு தரம் ரீ செட்டில்மெண்ட் என்கிற சர்க்கார் சட்டப்படி, ஒவ்வொரு ஜில்லாவையும் 30 வருடத்திற்கு ஒரு தரம் அளந்து சர்வே செய்து ரூபாய்க்கு இவ்வளவு அதிகப்படுத்துவது என்கிற முறைப்படி அனேக ஜில்லாக்களை அளந்து சர்வே செய்து வரி அதிகப்படுத்திவிட்டு, தஞ்சை
ஜில்லாவுக்கு வந்து அளந்து வரி போடும் போது தஞ்சை ஜில்லாக்காரர் ஆக்ஷேபித்தால் எப்படி ஒப்புக் கொள்ளக்கூடும்? உதாரணமாக, ஒரு முனிசிபாலிட்டியில் 5 வருடத்திற்கு ஒரு தரம் கவனித்து வரி போடுகிறது என்கிற சட்டப்படி கவனித்து வரிபோடும் முறை துவக்கப்பட்டு 20 வீதிகளுக்கு வரி உயர்த்திப் போட்டு விட்டு 21-வது வீதிக்கு வரிபோட வரும்போது தங்கள் வீதிக்கு மாத்திரம் வரி உயர்த்தக்கூடாது என்று அவ்வீதிக்காரர் பேரால் அவ்வீதிக் கவுன்சிலர்கள் வாதாடினால் மற்ற கவுன்சிலர்கள் ஒப்புக் கொள்ளுவார்களா? ஒரு சமயம் அறியாமையினால் ஒப்புக் கொண்டாலும், சர்க்கார்
சம்மதிப்பார்களா? அது போலவே, மற்ற ஜில்லாக்களுக்குப் போட்டு அமுலில் வருவதை தஞ்சை ஜில்லாவில் மாத்திரம் எப்படி இல்லாமல் செய்ய முடியும்? தஞ்சை ஜில்லாவில் பிராமண மிராசுதாரர் அதிகமாயி ருப்பதால் தஞ்சைக்கு மாத்திரம் ஒரு சட்டம்; மற்ற ஜில்லாவுக்கு வேறு சட்டமா? வேறு பல ஜில்லாக்களைச் சேர்ந்த தேசீய மெம்பர்கள் கூட இத்தீர்மானத்தை எதிர்த்திருக்கிறார்கள். அப்படியிருக்க இது எப்படி ஜஸ்டிஸ் கக்ஷியின் மீது குற்றமாகும் என்பதைப் பாமர ஜனங்கள் அறிவதில்லை. அல்லாமலும் இதற்காக வரி கொடா இயக்கம் என்று ஒரு பித்தலாட்ட இயக்கம் கூட தஞ்சை ஜில்லாக்காரர்கள் ஆரம்பித்தார்கள். இதைக் கூட காங்கிரஸில் முக்கியஸ்தர்
– இப்போது பிராமணர்களால் பெரிதும் கொண்டாடப்படுபவரான ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் தஞ்சையில் நடக்கும் வரி கொடா இயக்கம் சுத்தப் பொய்யான இயக்க மென்றும் பத்திரிகை இயக்கமென்றும் கூடச் சொன்
னார். அதைப் பற்றி பேசுவோர் யாரையும் காணோம். இப்போது அவரை பிராமணர்கள் லோககுருவுக்கு அடுத்தபடியில் கொண்டாடு கிறார்கள்.

தங்கள் நன்மைக்கு கொஞ்சம் விரோதமாய் யாராவது பேசினால் மாரீசன் என்று சொல்லி விடுகிறார்கள். தங்கள் நன்மைக்கு அநுகூலமாய் தங்கள் தாளத்திற்கு ஏற்றாற்போல் ஆடினால் மகா சத்தியகீர்த்தி, உத்தமர் என்று சொல்லி வருகிறார்கள். ஆகிய இம்மாதிரி பிரசாரங்களால் நமது ஜனங்கள் அடியோடு ஏமாந்துபோய் பரிதபிக்கிறார்கள் என்பது நிதர்சனமாயிருக்கிறது. ஆதலால், பிராமணரல்லாதார் ஏதாவது முற்போக்கடைய வேண்டுமானால், சுயமரியாதையோடு வாழ வேண்டுமானால், தங்கள் சமூகத்தில் பாமர ஜனங்கள் உண்மையை அறியும்படியும், பிராமணப் பிரசாரத்தால் ஏமாந்து
சமூகத் துரோகிகள் ஆகாதபடியும் செய்யத் தகுந்த பிரசாரங்கள் நடை பெறவேண்டும். ஜஸ்டிஸ் கக்ஷியின் உண்மையை பொது ஜனங்கள் அறியும்படியும், பொது ஜனங்களுக்கு அக்கட்சியில் உண்மையாய் என்ன குறை இருக்கிறது என்பது உணர்ந்து, ஏதாவது இருந்தால் அதைத் திருத்தி வசதி உண்டாகும்படியும் வேண்டிய ஏற்பாடுகள் பிராமணரல்லாதார் வகுப்பில்
அக்கறை உள்ளவர்கள் உடனே செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் இது சமயம் ஏமாந்து போய் விட்டோமானால் பிறகு ஐயோ என்றாலும் வராது, அம்மா என்றாலும் வராது என்பதையும் உணரக்கோருகிறோம்.