“வகுப்புவாரிப் பிரதிநிதித்வம்” என்கிற பதத்தை நாம் பொது ஜனங்களின் ஞாபகத்துக்கு கொண்டு வந்தவுடனே, அதனால் பிரதிகூலம் அடையக்கூடிய ஜனங்கள், தங்களால் கூடிய தடைகளை யெல்லாம் செய்ய மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் என்கிற உரிமையைப் பற்றி நமது நாட்டில் வெளிப்படையாக நாம் அறிய சுமார் 20 வருட காலங்களுக்கு மேலாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்திருந்தாலும், சுமார் 10 வருடங்களுக்கு முன்பாகவே ராஜீய ஸ்தாபனங்களில் அது பிரவேசித்து முஸ்லீம் சமூகத்தாருக்கு நமது தேசீய காங்கிரசின் மூலமாகவே, அதாவது “தேசம்தான் பிரதானம்; வகுப்புகள் அதற்குப் பிற்பட்டது” என்கிற தத்துவத்தையே கொள்கையாக உடைய காங்கிரஸ் மூலமாக அதை ஒப்புக் கொண்டு சர்க்கார் மூலமாய் அதை அமுலுக்குக் கொண்டு வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்பொழுது புழக்கத்திற்கு வந்துவிட்டது.

அதோடு மாத்திரமல்லாமல், காங்கிரஸ் ஸ்தாபனங்களிலேயும், அதிலுள்ள ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் அளிக்கப்பட்டும் வந்திருக்கிறது. அதாவது காங்கிரஸ் என்பதை ராஜீய ஸ்தாபன நிர்வாகமாக வைத்துக்கொண்டால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்பது பார்லி மெண்ட் போன்ற ஓர் ஆட்சி சபைக்குச் சமானமாகும். அவ்வித ஆட்சி சபைக்கு இந்தியாவின் சகல பிரஜைகளின் சார்பாக 350 மெம்பர்கள் ஒட்டு மொத்தம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் நமது தமிழ்நாட்டுக்கு மாத்திரம் 25 ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இருபத்தைந்துக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விதிகளின் 8- வது பிரிவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்தல் என்கிற தலைப்பின் கீழ் “நான்கு முஸ்லீம்கள், ஒரு கிறிஸ்தவர், தீண்டாதார் என்று சொல்லப்படும் ஒருவர்” ஆகிய இவர் களையும் இவர்களைத் தவிர மொத்தத்தில் அதிக வாக்கு பெற்ற 19 அங்கத் தினர்களையும் தேர்தல் செய்ய வேண்டியது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்குப் பெயரென்ன? இது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமா? அல்லவா?

அன்றியும் 1917-ம் வருடத்தில் பிராமணரல்லாதார் ராஜீய உரிமைகள் பெறுவதற்கும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவதற்கும் டாக்டர்‌ டி. எம். நாயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிராமணரல்லாதார் இயக்கம் நாமெல்லோரும் அறிந்ததே. அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றி அவ்வியக்கத்தில் சேராதிருந்த சில பிராமணரல்லாதார்களும் ஒப்புக் கொண்டுதானிருந்தார்கள். ஆனால், அதனுடைய திட்டங்களிலும் அவற்றை அடையும் வழிகளிலும் மாத்திரம் அபிப்ராய பேதம் ஏற்பட்டு அதற்காக‌ அதில் சேராமல், அதே கொள்கைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு சென்னை மாகாணச் சங்க மென்கிற பெயரால் பிராமணரல்லாதார் இயக்கம்
ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இவ்வியக்கம் பிராமணரல்லாதார் இயக்கமென்று சொல்லப்பட்டாலும் உண்மையில் பிராமணர்களுடைய பொருளும், ஆதரிப்பும், நடத்தும் அதிகாரமும் ஆகிய இவைகளே அவைகளில் குடி கொண்டிருந்தன. அப்படியிருந்த போதிலும் ராஜீய உரிமைகளுக்காகக் காங்கிரசைப் பின்பற்றுவதும், பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் அடைவதுமே அதன் கொள்கையாயிருந்ததென்பதில் இப்போது யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை.

அதற்காதாரமாக 1919-ம் வருடம் அக்டோபர் மாதம் 11,12 தேதிகளில் ஈரோட்டில் ஸ்ரீமான் லாட் கோவிந்ததாஸ் அக்ராசனத்தின் கீழ் நடந்த “சென்னை மாகாணச் சங்க கான்பரென்ஸ்”என்னும் மகாநாட்டில் உபசரணை அக்ராசனராயிருந்த ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வரவேற்புப் பிரசங்கத்தில் 6-வது பக்கம் “சென்னை மாகாணச் சங்கத்தார் வேலை”என்னும் தலைப்பின் கீழ் 2-வது காலத்தில், “தொழிலாளர் 100-க்கு 99 பேர்பிராமணரல்லாதாரேயாவர். இவர்களுக்கு நலன் செய்து வருவோர் நமது இயக்கத்தில் சேர்ந்தவரா? மற்றப் போலி இயக்கத்தில் சேர்ந்தவரா? தொழியாளர் இயக்கத்துக்கும், முன்னேற்றத்துக்குமே காரணமாயுள்ள சென்னை மாகாணச் சங்கத்தின் அவசியத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமா? காங்கிரஸ் கொள்கையைத் தழுவுவதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் பெற முயல்வதும் இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்தியரெனக் கொண்டு அவரோடு சகோதரத்துவம் பூண்டு தேச சேவையைச் செய்வ துமே நமது சங்கத்தின் பெரு நோக்கமாதலால், அந்தந்நோக்கத்தை நிறைவேற்ற நமக்கென தனியாகப் பத்திரிகைகளும், பிரசாரகர்களும் வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
அதன்படியே ஷை மகாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தைப் பற்றி ஸ்ரீமான்கள் திரு.வி.கலியாணசுந்தர முதலியார். கேசவபிள்ளை முதலியார்களால் விஷயாலோசனைக் கமிட்டியில் தயாரிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை டாக்டர் வரதராஜுலு நாயுடுவால் மகாநாட்டில் பிரேரேபிக்கப்பட்டதில் ஸ்ரீமான் தஞ்சை இராமச்சந்திரம் செட்டியாரவர்களால் ஆட்சேபிக்கப்பட அதற்கு ஸ்ரீமான் நாயுடுவே வகுப்புவாரிப் பிரதிநிதித்வக் கொள்கையை ஒப்புக்
கொள்ளாதவர்களுக்கு இம்மகாநாட்டில் இடமில்லையென்று
சொன்னதின் பேரில் ஏகமனதாய் நிறைவேறியிருக்கிறது.

அல்லாமலும், காக்கிநாடா காங்கிரஸிலும் ஸ்ரீமான் தாஸூம். கல்கத்தா மகமதியர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருப்புவாரிப் பிரதிநிதித்வத்தையே முக்கியமாகக் குறித்து ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை சட்டசபையிலும், இந்தியா சட்டசபையிலும் மற்றும் பல மாகாண சட்டசபைகளிலேயும் வகுப்பு வாரிப்பிரதிநிதித்வத்தின் பேரால் இன்றைய தினமும் இந்திய அங்கத்தி னர்கள்
உட்கார்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்தல ஸ்தாபனங்களிலும் மற்றும் பல ராஜீய ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தின் பெயரால் தாழ்ந்த வகுப்பார்கள் சர்க்காரால் நியமனம் பெற்று உட்கார்ந்துக் கொண்டு
தான் வருகிறார்கள்.

இன்றைய தினமும், காஞ்சீபுரம் மகாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கூடாதென்று வாதாடின தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவரென்று சொல்லும் ஸ்ரீமான் ஜெயவேலுவும், மகமதியர் வகுப்பைச் சேர்ந்தவர்களான ஜனாப்கள் ஷாபி மகமது, அமீத்கான் இவர்களும், வகுப்புவாரிப் பிரதிநிதித்வ கொள்கையின் மூலமாய் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஸ்தானம் வகித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். திருச்சியில் இரண்டு வருடங்களுக்கு முன் கூடின மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அக்ராசனராயிருக்கும் போது, ஜனாப்கள் ஷாபி மகமது, சென்னை அப்துல் ஹமீத்கான் முதலியவர்கள் தங்களுக்கு நான்கு ஸ்தானங்கள் போதாதென்றும் ஆறு ஸ்தானங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் விண்ணப்பம் எழுதி மற்றும் பல மகமதியர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் குழந்தையும் தங்கள் வகுப்பாருக்குள்ள வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தின் பலனை அநுபவத்திருக்கிறார். அவருடைய பெயர் இன்றையத்தினமும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வ
“வோட்டர் லிஸ்டில்” இருந்துதான் வருகின்றது. இவ்வளவு பலம் பெற்று அமுலில் இருக்கும் ஒரு அபிப்ராயத்தை – பொது ஜனங்களின் விருப்பத்தை தங்களுடைய பணப் பெருக்கத்தாலும் மித்திர பேதத்தாலும் அழுத்திவிடலாமென்று நினைப்பது எவ்வளவு யோக்கியப் பொறுப்பற்ற காரியமென்பதைப் பொதுஜனங்களே யோசிக்க வேண்டியது. அல்லாமலும் ஸ்ரீமான்
முதலியாரையும், ஜனாப்கள் ஷாபி மகமது, அமீத்கானையும், ஸ்ரீமான்கள் குழந்தை, ஜயவேலு முதலியவர்களையும் பணங்காசு கொடுத்தோ, வேறு வழியில் அவர்களை ஏமாற்றியோ, தாங்கள் சுவாதீனம் செய்து கொண்டதினால் இவர்களால் என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியும்? கூட்டங்களிலெல்லாம் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைத் தலைமை வகிக்கச் செய்யலாம்.
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார்தான் தமிழ்நாட்டுத் தலைவர் – தலைவரென சத்தம் போடச் செய்விக்கலாம். ஆனால், தேசத்தார் இவர்களைப் பின்பற்றச்செய்யக்கூடுமா? இவர்கள் வார்த்தையை தேசத்தார் நம்பிவிடுவார்களா? நேற்றும் முன்னும் இவர்கள் பேசியதையும் இவர்களின் நடத்தையையும்
பொது ஜனங்கள் ஆராயமாட்டார்களா? எவ்வளவு நாளைக்குப் பொது ஜனங்களை ஏமாற்ற முடியும்? “தண்ணீரில் விழுந்தவனைப் பிடிக்க போய்த் தானும் ஆழ்ந்துவிட்ட கதை”
போல் ஸ்ரீமான் முதலியார், ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காருக்கும் சி.இராஜகோபாலாச்சாரியாருக்கும் உதவி செய்யப்போய் நாணய உலகத்திலிருந்து விலகி விட்டார். பொது ஜனங்கள் தன்னை
எப்படி மதிக்கிறார்கள் என்னும் கவலையே இல்லாமல் அதிக மதுபானம் செய்தவர்கள் தங்களை உலகத்தார் எப்படி நினைக்கிறார்களென்பதைப்‌ பற்றி கவலை இல்லாமல் இடுப்புத் துணி நழுவுவது கூடத் தெரியாமல் எப்படித் திரிவார்களோ,‌‌அதுபோலவே நமது முதலியார் தன்னையே
சுவாதீனம் இழந்து “ஒருவருட காலத்துக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்வத்துக்கு விரோதமாய் பிரசாரம் செய்யப் போகிறேன்” என்று வீரகண்டாமணி ஆட்டுகிறார். பக்கத்தில் இருக்கும் அவருடைய பிராமண நண்பர்கள் “சபாஷ், சபாஷ்” என்று கைதட்டுகிறார்கள். இரண்டு பிராமணர்கள் வாயினால் சபாஷ்
என்று சொல்லப்படுவதைக் கேட்டுக் கொண்டு கூத்தாடுகின்றாரேயொழிய கோடிக் கணக்கான மக்கள் இவரை என்ன சொல்லுகின்றார்களென்பதைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் மயங்கியிருக்கிறார். பிராமணரல்லாத தொழிலாளர் அபிமானத்தால் ஏற்பட்ட தன்னுடைய பத்திரிகையாகிய “நவசக்தி”யை அதன் உண்மைப் பெயருக்கேற்ப அதற்கு ஒன்பது வித சக்தியைக் கற்பித்துக்‌ கொண்டு போகிறார். அதாவது: –

1. ‌வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் தான் சென்னை மாகாணச் சங்கத்திலிருந்தபோது வேண்டும் என்றார்.

2. பிறகு காஞ்சி அக்ராசனப் பிரசங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் காங்கிரஸில் தான் முட்டிக்கொள்ள வேண்டுமென்கிறார்.

3. ‌அக்ரசனப் பீடத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வ தீர்மானத்தை மகா நாட்டில் அநுமதிப்பது ஒழுங்குக்கு விரோதமானது என்கிறார்.

4. “நவசக்தி” பத்திரிகையில் சுயராஜ்யக் கட்சியை ஏற்றுக்கொள்ளாதவர் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் வேண்டுமென்று கேட்பதற்குப்பொருளேயில்லை என்கிறார்.

5. வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தை ஆதரித்து தான் எங்கும் பேசவே யில்லை என்கிறார்.

6. பிறகு வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தால் நன்மையுமி ருக்கிறது: தீமையுமிருக்கிறது என்கிறார்.

7. தற்கால நிலைக்கு எனக் கேட்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தை என்றுங் கேட்டுக்கொண்டிருத்தல் நியாயமா? என்கிறார்.

8. பிறகு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகக் கேட்ட வகுப்புவாரிப்பிரதிநிதித்வத்தை உண்மையென்று நினைத்துக் கொள்ளலாமா? என்கிறார்.

9. பின்பு வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்திற்கு விரோதமாய் தமிழ் நாடெங்கும் ஒரு வருடத்திற்குப் பிரசாரம் செய்யப்போகிறேன் என்கிறார். (இதுயாரைக் கெடுப்பதற்காகச் சொன்னேன் என்று நாளைக்குச் சொல்லு வாரோ தெரியவில்லை)

ஆகிய ஒன்பது சக்திகளும் நமது முதலியாருக்கு எப்படி படிப்படியாய் உண்டாகி வந்திருக்கின்றதென்பதை “நவசக்தி” அன்பர்கள் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை சக்திகள் தொக்கி இருக்கின்றதோ ஸ்ரீமான் முதலியாருக்கும் கூடத் தெரியாது என்றே நினைக்கிறோம்.

நமது ஸ்ரீமான் முதலியார் தனது வாதத்துக்கு சக்தியில்லாத சமயங்களில் காந்தியடிகளின் பெயரை இழுத்துவிட்டு விடுவது வழக்கம். ஏனென்றால், அந்தப் பெயரைச் சொல்லி தப்பித்துக் கொள்ளுவ தோடு,‌ நவசக்தியின் வாசகர்கள் தன்னை காந்தி வழியில் நிற்போரென்று எண்ண வேண்டுமென்கிற ஆசை. அதாவது மகாத்மா காந்தி சுயராஜ்யக் கட்சியாருக்கு உதவி செய்யும்படி சொல்லியிருக்கிறார் என்பதை அடிக்கடி எழுதிக் கொண்டு, தான் அந்த‌‌ சாக்கில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு உதவி செய்ய வழி தேடுவது. இப்பொழுது சுயராஜ்யக் கட்சிக்கு உதவி செய்வதுடன் நிற்காமல் பிராமணரல்லாதாருக்கு கெடுதி செய்யத்தகுந்த அளவுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்திற்கு
இடையூறாய்ப் புறப்படுவேனென்கிறார். மகாத்மா காந்தி சுயராஜ்யக் கக்ஷியாருக்கு உதவி செய்யும் திட்டத்தில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்வத்திற்கு எதிர்பிரசாரம் செய்வதையும் சேர்த்திருக்கின்றாரா என்பதைப் பொது ஜனங்கள்
கவனிக்க மாட்டார்களென்று ஸ்ரீமான் முதலியார் நினைத்துவிட்டார் போலும். இவைகளெல்லாம் எப்படி இருந்த போதிலும் நமக்கு அதைப்பற்றி அதிகமான கவலை இல்லை. ஆனாலும் ஒன்று மாத்திரம் நாம் சொல்லாமல் இருக்க
முடியவில்லை. தேசத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும்,‌ விடுதலையின் பேராலும், சுயராஜ்யத்தின் பேராலும், உரிமையின் பேராலும், காந்தியடிகளின் பேராலும் நமது நாட்டில் கோடிக் கணக்கான பாமர ஜனங்களின் பிரதிநிதிகளாய் எப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் வேலை செய்கிறார்கள் என்பதும், இவர்
களிடத்தில் எவ்வளவு நாணயம் இருக்கிறது என்பதும், இவர்களுடைய “பொது சேவையின்” கருத்தென்ன என்பதும் ஆகிய இவைகளை ஜனங்கள் உணரவேண்டுமென்பது மாத்திரம் நம்முடைய பெரிய கவலையாயிருக்கிறது. 15 ரூபாய் சம்பளத்திற்காக முன்பின் அறியாத ஜெர்மானியரோடும் துருக்
கியரோடும் சண்டை செய்வதற்காகப் போய் உயிர்விட்ட இந்து, மகமதியர், கிறிஸ்தவர்கள் உள்ள ஓர் நாட்டில், எவ்வளவோ பதவிகளுக்காகவும், எவ்வ ளவோ சபாஷ் பட்டங்களுக்காகவும், எவ்வளவோ சம்பாதனைக்காகவும் மானம் விடுகிற ஜனங்கள் அபூர்வமாகப் போய்விடுமா? தேசத்திற்கு நல்ல
காலம் இருக்குமேயானால், இவற்றை எல்லாம் ஜெயித்துக் கொண்டு போனால்தான் முடியுமே தவிர இவற்றை யெல்லாம் ராஜி செய்துக்கொண்டு போவதாய் இருந்தால் ஒரு நாளும் விடியாது; உரிமையும் கிடையாது.